பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் முயற்சி பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் சுட்டுக் கொலை!
மாத்தறை - வெலிகம பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ஹீனெட்டியன - மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
வர்த்தகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி எவரிவத்தை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்தபோது,
துப்பாக்கி இயங்காமையால் குறித்த வர்த்தகர் உயிர்தப்பினார். இந்நிலையில் கடந்த ஜனவரி 9ஆம் திகதி எவரிவத்த பிரதேசத்தில் பிரிதொரு வர்த்தகர் மீது துப்பாக்கி சூடு
நடத்த முயன்றபோது துப்பாக்கி கீழே விழுந்தமையால் அங்கிருந்து தப்பிச் சென்றார். எனினும் அன்றைய தினமே மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் வீடொன்றில் இவரால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
துப்பாக்கிப்பிரயோகங்களை மேற்கொள்ளல் மற்றும் கப்பம் கோரலின் பின்னர் வெவ்வேறு பிரதேசங்களுக்கு தப்பிச் சென்ற நிலையிலேயே கடந்த புதன்கிழமை வெலிகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது அவரால் கட்டுநாயக்க - மாதுவ பிரதேசத்தில்கை குண்டு மற்றும் துப்பாக்கியொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய சந்தேகநபரையும் அழைத்துக் கொண்டு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பொலிஸார் மாதுவ - எல்லோவிட்ட பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேகநபர் அங்கிருந்த கைக்குண்டினை எடுத்து பொலிஸார் மீது தாக்கியுள்ளார். இதன் போதே பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு பொலிஸார் மீது அவரால் எரியப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை. இதன் போது காயமடைந்த சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உயிரிழந்த சந்தேகநபரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்ற இடத்தில் மினுவாங்கொடை நீதவானால் நீதவான் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.