யாழ். மல்லாகம் துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி: தற்போதைய நிலை என்ன?

ஆசிரியர் - Admin
யாழ். மல்லாகம் துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி: தற்போதைய நிலை என்ன?

யாழ். மல்லாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) இரவு சுன்னாகம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இளைஞனொருவர் உயிரிழந்திருந்தார். குறித்த சம்பவத்தில் யாழ்.மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன்(வயது-34) என்பவரே உயிரிழந்தவராவார்.

மல்லாகம் சகாயா மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்தப் பெருநாளின் முதல்நாளான கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டிருந்த இளைஞன் மீதே குறித்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மல்லாகம் சகாயா தேவாலயப் பெருநாளில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்துப் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் சுன்னாகம், தெல்லிப்பழைப் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மல்லாகம் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகள் மேற்கொண்டதுடன் நேற்று இரவு முழுவதும் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் இன்று அதிகாலை குறித்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தேவாலயப் பகுதியிலிருந்து வெளியேறித் தமது வீடுகளுக்குச் சென்றதையடுத்துத் தேவாலய வளாகம் வெறிச் சோடிக் காணப்படுகின்றது. எனினும், தேவாலயத்திற்கு முன்பாகவும் அதனை அண்டியுள்ள யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதியான கே.கே. எஸ். வீதியிலும் பெருமளவு துப்பாக்கி ஏந்திய பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீதியால் பயணம் மேற்கொள்பவர்கள் ஒருவித அச்சத்துடனேயே பயணம் மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்குப் பொலிஸார் முற்றாகத் தடைவிதித்துள்ளதுடன் அப்பகுதிக்குச் சென்ற மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பலரை வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு விரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,மல்லாகம் சந்திக்கு அருகில் குப்பிளான் சந்திக்குச் செல்லும் வீதியில் இன்று காலை முதல் தரித்து நிற்கும் பொலிஸாரின் ஜீப் வாகனத்தின் முன்புறமாகவும், பின்னாலும் அமர்ந்துள்ள பொலிஸார் கைத்தொலைபேசிகளை மறைத்து வைத்து வீதியால் சென்று வருபவர்களைத் தமது கைத்தொலைபேசிகளில் வீடியோ எடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

பொலிஸாரின் இத்தகைய செயற்பாடும், விசேட அதிரடிப்படையினரின் பிரசன்னமும் தமது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டும் அப்பகுதிப் பொதுமக்கள் உரிய பொறுப்பதிகாரிகள் இந்தவிடயத்தில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை,மல்லாகத்தில் பொலிஸாரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னரான நிலைமைகள் மற்றும் சம்பவம் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் உடனடிச் செய்திகளை அறிந்து கொள்வதற்காக எமது செய்திச் சேவையுடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு