‘இங்கே அரசியல் நடத்தாதே!’: யாழில் இளைஞர்களால் விரட்டப்பட்ட அரசியல்வாதி

ஆசிரியர் - Admin
‘இங்கே அரசியல் நடத்தாதே!’: யாழில் இளைஞர்களால் விரட்டப்பட்ட அரசியல்வாதி

யாழ். மல்லாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17)இரவு சுன்னாகம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இளைஞனொருவர் உயிரிழந்திருந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

குறித்த சம்பவத்திற்கெதிராக மல்லாகம் சகாயா மாதா பெருநாளின் கொடியேற்ற வைபவத்தில் கலந்து கொண்டிருந்த பொதுமக்களும், அப்பகுதிப் பொதுமக்களும் இணைந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழைப் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மல்லாகம் நீதவான் ஏ. யூட்சனின் வருகையை எதிர்பார்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் திடீரென அந்தப் பகுதிக்குள் காரொன்று பிரசன்னமாகியுள்ளது.

அந்தக் கார் மல்லாகம் நீதவானுடையது என நினைத்திருந்த பொதுமக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தான் குறித்த காரில் வந்துள்ளார் என்பதை அறிந்ததும் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

கேசவன் சயந்தன் அப்பகுதியில் குறுக்காக காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி வந்து அங்கு நின்றவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

இதன் போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் “நாங்கள் இங்கு ஒரு உயிரைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். நீ இங்கே அரசியல் நடத்தாதே …இங்கு அரசியலுக்கு இடமில்லை” எனக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இளைஞர்களின் கடும் எதிர்ப்பையடுத்து அவர் மீண்டும் தனது காரில் வீடு திரும்பிச் சென்றுள்ளார்.

கேசவன் சயத்தனின் வருகைக்குச் சுமார் அரைமணித்தியாலங்கள் முன்னர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் அப்பகுதிக்கு வருகை தந்து பொதுமக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள போதிலும் அவரது நடவடிக்கை காரணமாக இளைஞர்கள் எந்தவித எதிர்ப்பையும் வெளியிடவில்லை.

இதேவேளை, வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக அப்பகுதியில் நின்றிருந்தால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் தாக்குதலுக்குள்ளாகியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு