யாழில் உயிரிழந்த குழந்தை உயிருடன் இருப்பதாகப் பரவிய செய்தியால் பரபரப்பு

ஆசிரியர் - Admin
யாழில் உயிரிழந்த குழந்தை உயிருடன் இருப்பதாகப் பரவிய செய்தியால் பரபரப்பு

யாழ். உடுவில் பகுதியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தைக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் போது உயிர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அந்தக் குழந்தைக்கு அவளது பெற்றோர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.

காய்ச்சல் குறையாத காரணத்தால் குறித்த குழந்தையைப் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை(07) இரவு குறித்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் சடலம் குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் இறுதிச் சடங்கு உடுவில் ஆலடியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் பகல் இடம்பெற்றது. இதன் போது குழந்தையின் சடலத்திலிருந்து சலம், மலம் வெளியேறியுள்ளது. அத்துடன் குழந்தையின் கைகள் அசைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால், குழந்தை உயிருடன் இருப்பதாகப் பலராலும் நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இதனையடுத்துக் குறித்த குழந்தையை அவரது உறவினர்கள் அருகிலுள்ள தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடாத்தினர்.இந்து முறைப்படியும் வழிபாடு நடாத்தப்பட்டது.

எனினும் குழந்தை உயிரிழந்த நிலையில் தான் காணப்படுவதாக அப்பகுதிப் பெரியவர்கள் சிலரால் சுட்டிக் காட்டப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் காட்டுத் தீ போல பரவிய செய்தியால் உடுவில் பகுதி மற்றும் அயற்பிரதேசங்களில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தைக் கேள்விப்பட்ட பலரும் குறித்த குழந்தையின் வீடு நோக்கிப் படையெடுத்தும் வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு