யாழ்.தீவுப்பகுதிக்கான படகுச்சேவை கட்டணம் அதிகளவில் அறவிடப்படுவதால் மக்கள் சிரமம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவுப்பகுதிக்கான படகுச்சேவை கட்டணம் அதிகளவில் அறவிடப்படுவதால் மக்கள் சிரமம்..

யாழ்.தீவு பகுதிக்கான போக்குவரத்து படகுச் சேவைக்கான கட்டணங்கள் சட்டத்திற்கு மாறான வகையில் அதிகளவில் அறவிடப்படுவது குறித்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து கட்டணங்கள் சட்டத்திற்று மாறாக  அதிகளவில் வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்தோடு உரிய அனுமதிகள் பெறப்படாது செல்வாக்குகளின் அடிப்படையில் படகுகள் பலவும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதில் நயினாதீவிற்கான படகுச் சேவையில் நயினாதீவு விகாரைக்கு செல்வதற்கான படகுச் சேவை எந்தவித அனுமதியும் பெறப்படாமல் சட்டத்திற்கு முரணான வகையில் நடக்கின்றது. அங்கு அதிகளவான கட்டணங்களும் அறவிடப்படுகிறது. 

இவ்வாறான செயற்பாடுகளால் அங்குள்ள மக்களும் அப் பிரதேசங்களுக்குச் சென்று வருகின்ற பயணிகளும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இது குறித்து  சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கின்ற போதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஏனெனில் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். 

ஆகவே இதற்கொரு முடிவை எடுக்க வேண்டுமென மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய தற்போது உள்ளூராட்சி சபைகளின் உப விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதுடன் இதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் எடுப்பதாக இணைத்தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு