SuperTopAds

யாழ், மட்டு. திருமலை மாவட்டங்களில் டெங்கு ஆபத்து அதி உச்சம்! - நோய்தொற்றியல் பிரிவு எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
யாழ், மட்டு. திருமலை மாவட்டங்களில் டெங்கு ஆபத்து அதி உச்சம்! - நோய்தொற்றியல் பிரிவு எச்சரிக்கை

டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள 12 மாவட்டங்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களும் அடங்கியுள்ளதாக இலங்கை நோய்தொற்றியல் பிரிவு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய 12 மாவட்டங்களில் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சம் கொண்ட மாவட்டங்களாக 2016, 2017 மற்றும் 2018 முதல் 5 மாதங்களின் புள்ளி விவரங்களின் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை, புத்தளம், பதுளை, கல்முனை, அநுராதபுரம் மொனாரகல, பொலன்நறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து உச்சமாக உள்ள மாவட்டங்களாக உள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை, வவுனியா மற்றும் நுவரேலியா ஆகிய மாவட்டங்கள் டெங்கு தொற்று சராசரியாக காணப்படும் மாவட்டங்களாக உள்ளன.

2017ஆம் ஆண்டைவிட 2018ஆம் ஆண்டு முதல் 5 மாதங்களிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.