மண்டைதீவில் காணிகளை அபகரிக்கும் கடற்படை! - போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
மண்டைதீவில் காணிகளை அபகரிக்கும் கடற்படை! - போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை

மண்டைதீவுப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பதற்கு, பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அதனைத் தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம். காணியை சுவீகரிக்க முற்பட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு பகுதியில் இலங்கை கடற்படையினருக்காக காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

மண்டைதீவு பகுதியில் குடிமனைகள், வயல்காணிகள் மற்றும் தோட்ட நிலங்களை கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களுடைய காணிகளை இராணுவத்தினர் அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளனர்.

பின்னர் அவற்றை சுவீகரிப்பதற்கு அதிகாரிகளின் உதவியை நாடுகின்றனர். வலுக்கட்டாயமாக செயற்பாடுகள் செய்யவைப்பதுமான தொடர் நடவடிக்கை குடாநாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் வலிவடக்கு பகுதியில் சிலகாணிகளை விட்டிருந்தாலும் மேலும் காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

அதேபோன்று 1990ஆம் ஆண்டு தீவகத்தை ஆக்கிரமித்த கடற்படையினர், பல பொதுமக்களின் காணிகள், நிலங்களை அபகரித்து வைத்துள்ளார்கள். அத்துடன் பல கொலைகள் கடத்தல்களும் தீவகத்தில் அரங்கேறியுள்ளது. இன்றுவரை தமது இடத்தில் மீளகுடியேற முடியாமல் பொதுமக்கள் பல துன்பங்களை தற்போதும் அனுபவித்து வருகின்றார்கள்.

மண்டைதீவில் மட்டுமே 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவத்தினராலும் ஒட்டுக்குழுக்களினாலும் பிடிக்கப்பட்டு இன்றுவரை தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இராணுவத்திடம் கேட்டபோது தோழரிடம் கேளுங்கள் என்றார்களாம். அந்த தோழர் இன்று வரை வாய் மூடி மௌனமாகவே உள்ளார் என்று மக்கள் இன்றும் கொதித்துப்போயுள்ளனர். 

இந்தநிலையில் மேலும் மண்டைதீவுப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக்கூட கடற்படையினருக்கு விட்டுக் கொடுப்பதற்குநாம் இடமளிக்க மாட்டோம். அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளுக்கு துணை போகக்கூடாது. குhணி அளக்க முற்பட்டால் பொதுமக்களை அழைத்து போராட்டத்தை மேற்கொள்வோம்.

அனைவராலும் கைவிடப்பட்ட பகுதியாக மண்டைதீவு வனாந்தர பூமியாக தற்போதுமாறியுள்ளது. தொழில் ஏதும் இன்றி அங்குள்ள மக்கள் நாளாந்தம் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் மிஞ்சியுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கு நாம் விடமாட்டோம்.

இதை ஒருஎச்சரிக்கையாக சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும். அதை மீறி செயற்பட்டால் நிலஅளவை திணைக்களத்தை முற்றுகையிட்டு, பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதுடன் இந்த செயற்பாட்டை நிறுத்துவோம் என மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு