வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

ஆசிரியர் - Admin
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும் என்ற வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைப் போராட்டத்தில் மேற்கொண்ட நீர் வீச்சுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை(16) முற்பகல்-10 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ளது.

தற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்று முடிவடைந்துள்ளது. ஆனால், நேர்முகத்தேர்வு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் எப்போது? எதுவரை வழங்கப்படவுள்ளது? என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை குறித்த அமைச்சு வெளியிடவில்லை.

இதன் பொருட்டு எழுத்துபூர்வமாக 35 வயதிற்கு மேற்பட்டவர்களையும், 2017 வேலையற்ற பட்டதாரிகளையும் உள்வாங்குதல் வேண்டும் எனவும் பட்டச் சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையிலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்குதல் வேண்டும் என வலியுறுத்திக் கொழும்பில் நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நீர் வீச்சு மேற்கொள்ளப்பட்டு எமது தொழில் உரிமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட 35 வயதிற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய அமைச்சுக்குப் பெயர் விபரங்கள் வழங்கப்படவுள்ளது.

எனவே, அன்றைய தினம் வருபவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே எம்மால் வழங்கப்படும் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு