முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்துவோம் -யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்துவோம் -யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைக் காவு கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அரசியலாக்க முயலும் தமிழ் அரசியல்வாதிகளின் சதித்திட்டங்களை முறியடித்து புனிதம் மிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் மக்களின் ஒத்துழைப்போடு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் திட்டமிட்டபடி நடத்தும் என யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து  யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும், தமிழ் இனம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பு நிகழ்வை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் சாட்சியமாய் விளங்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்கும் அந் நாளில் சகலரையும் அரசியல் கட்சி மத பேதமின்றி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாட்டை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அளப்பெரிய பங்காற்றி அதிகளவான உயிர் தியாகங்களை செய்தும் இரத்தம் சிந்தியும் இன்று வரை பின் நிற்காது செயற்பட்டு வருகிறது.

பேரினவாத அடக்கு முறைக்குள்ளும் மாவீரர் நாள் தமிழீழ எழுச்சி நாட்கள், தமிழீழ போராளிகள் மற்றும் தியாகிகளின் நினைவு நாட்களை நினைவு கூர்ந்து வந்துள்ளதுடன் இதற்காகப் பல மாணவர்கள் சிறைகளுக்குள் சென்றும் மீண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியலில் ஏற்படும் முடிவுகளில் பாரிய தாக்கத்தை செலுத்தத்தக்க வகையில் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் காலம் காலமாக இருந்து வருகின்றன. பௌத்த திணிப்பிற்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் போராட்ட நினைவுச் சின்னங்களை பாதுகாத்து வருவதோடு அவற்றை நிர்மாணிக்கும் பணிகளில் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்பு அளப்பரியது.

இவ்வாறான தார்மீகப் பொறுப்புடையவர்கள் என்ற ரீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் கலப்பின்றி பொறுப்பெற்று நடத்தும் தகுதி கடமையும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு உண்டு. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்;தலில் தமது உறவுகளை இழந்து பல வலிகளைச் சுமந்த தமிழ் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது வடக்கு கிழக்கு தாயக மாணவர் சமூகத்தின் நிலைப்பாடு.

ஆகையால் இந்நிகழ்வை மாணவர் சமுகம் நடத்தவதற்கு தடையாக செயற்படுவோர்  உண்மையை உணர்ந்து மாணவர்களால் ஒழுங்கமைக்கப்படும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவு வழங்குவததை விடுத்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன் எம்மால் ஒழுங்கமைக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வேண்டிக்கொள்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு