வடமாகாண சபையின் முடிவுக்கு போக்குவரத்துச் சபையின் இணைந்த தொழிற்சங்கம் கடும் கண்டனம்

ஆசிரியர் - Admin
வடமாகாண சபையின் முடிவுக்கு போக்குவரத்துச் சபையின் இணைந்த தொழிற்சங்கம் கடும் கண்டனம்

அனைவரும் ஒன்றுபட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் சில கட்சிகள் அவர்களுக்குச் சாதகமான சமிக்ஞைகளை வழங்கியுள்ளனர். எனினும், வடமாகாண சபை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்புக்கு மாறாகத் தனியாக நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்க வேண்டுமெனத் தீர்மானித்துள்ளமையை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் கடுமையாகக் கண்டிப்பதாகச் சங்கத்தின் செயலாளர் அ. அருட்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை(08) நண்பகல் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும்-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு தடவையும் இந்த நிகழ்வு ஒற்றுமைகளின்றிய, ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பலத்தை வெளிப்படுத்துகின்றதொரு நிகழ்வாகவே இந்த நிகழ்வை நடாத்தி வருகின்றார்கள்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அழுகுரல்களுடனும், ஓலங்களுடனும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணத்தைத் தழுவியதை அறியாதவர்கள் தான் அரசியல் கட்சிகளிலிருக்கிறார்கள்.

பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் எஞ்சியிருக்கும் எமது மக்களைச் சாந்திப்படுத்த முடியாதவர்களாக எங்களுடைய தமிழ் அரசியல் தலைமைகள் இருந்து வருகின்றனர்.

அடுத்தவருட நினைவேந்தலுக்கு முன்னர் நாங்கள் ஒரு நினைவாலயமொன்றை அமைத்துத் தருகிறோம் எனச் சூளுரைத்து விட்டுச் சென்றவர்கள் இன்றுவரை அதற்கான எந்தவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. வடமாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைகின்ற சூழ்நிலையில் இந்தவிடயத்தை நாங்கள் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் ஓயும் வரை யுத்த சூழ்நிலையில் நானும் வாழ்ந்தவன் என்ற ரீதியில் அந்தத் துன்பகரமான நிகழ்வு இன்னமும் என்னை விட்டு அகலவில்லை.

21 வயதான என்னுடைய அக்காவின் மகன் இறந்ததன் பின்னர் எல்லோருமே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். நான் தனியொருவனாக அவனை என்னுடைய தோள்களில் சுமந்து சென்று புதைத்ததை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை.

எனது அக்காவின் மகனைப் போல கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தமது உறவுகளின்றி முள்ளிவாய்க்காலில் அடக்கம் செய்யப்பட்டதை நான் இங்கே நினைவு கூருகின்றேன்.

பெற்றோர்கள், உறவினர்கள், சகோதரர்களின் கண்களுக்கு முன்னால் நடந்த கோரமான நிகழ்வுகள் இன்றுவரை பலருடைய மனக் கண்களை விட்டு அகலாத ஒரு சூழ்நிலையில் தங்கள் கட்சிகளின் பலத்தைக் காட்டுவதற்காக முள்ளிவாய்க்காலில் அரசியல் பேச்சுக்கள் பேசுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வுகளைப் பாடசாலை மாணவர்களாகவிருந்த காலத்தில் நேரடியாகக் கண்ட நிலையில் தற்போது பல்கலைக்கழக மாணவர்களாகப் பரிணமித்து நிற்கின்றவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தம்முடைய தலைமையில் நடாத்துவதற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றார்கள். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

அரசியல் சாயமற்றுத் தூய உள்ளம் கொண்டவர்களாகப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைத் தலைமை தாங்கி வழிநடாத்துகின்றவர்கள் முன்னெடுத்துள்ள இத்தகைய பணிக்கு நாமனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பதை விடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ள ஒழுங்கமைப்புக்கு அமைவாக இந்த நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்க முன்வர வேண்டும்.

எதிர்வரும்-18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்குச் சென்று அனைத்து மக்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து, குடிநீர், உணவு போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு