யாழ்.கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் காசு வாங்கி மாணவர்களுக்கு கௌரவிப்பு! 4 ஆயிரம் முதல் 7 ஆயிரமாம், ஆளுநரும் போகிறாராம்...
யாழ்.நகருக்கு வெளியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா நடத்துவதாக கூறி மாணவர்களிடம் 4 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 7 ஆயிரம் ரூபாய் பணம் வாங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மையில் வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கவுள்ளதாகவும்,
அதற்காக ஒவ்வொரு மாணவர்களும் 4 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 7 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தவேண்டும். என பாடசாலை நிர்வாகத்தினால் கோரப்படுவதாகவும் சிலருக்கு கட்டாயம் செலுத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்காக திருமண மண்டபம் ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த மண்டபத்திலேயே இந்த நிகழ்வை வெகு விமரிசையாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்.வலய கல்வி பணிப்பாளர் இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
குறித்த பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற அதிகமான மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களாக காணப்படுகின்ற நிலையில்
அவர்களிடமே பணத்தை பெற்று அவர்களைக் கொளரவிக்கும் நிலையில் பாடசாலை அதிபர் ஈடுபட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில்
இவ்வாறு ஆடம்பர நிகழ்வை நடாத்துவது ஏற்புடையதல்ல என சில பெற்றோர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.அதுமட்டு அல்லாது குறித்த நிகழ்வுக்கு வடமாகாண ஆளுநர் வருகை தர உள்ளதாகவும் பாராட்டு நிகழ்வை விமர்சையாக நடத்துவதற்கு பணம் அறவிடப்படுவதாக பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
அதுமட்டுமல்லாது தமது பிள்ளைகள் தொடர்ந்தும் அருகில் உள்ள சிரேஸ்ட பிரிவு பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் என்ற காரணத்தினால் வேறுவழியின்றி பணத்தை செலுத்த முன் வந்ததாகவும் தெரிவித்தனர்.