SuperTopAds

“வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்” மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட நடமாடும் சேவை..!

ஆசிரியர் - Editor I
“வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்” மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட நடமாடும் சேவை..!

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியன இணைந்து “வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்” எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவையினை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளனர். 

மேற்படி விடயம் தொடர்பாக நேற்றய தினம் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது போக்குவரத்து ஆணையாளர் சுஜிவா சிவதாஸ் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் 

மற்றும் வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெறவுள்ள இவ் நடமாடும் சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை காலை 9மணி முதல் மதியம் 3 மணி வரை யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வடக்குமாகாணசபை வளாக கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை இனங்கண்டு தீர்க்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.இந்த நடமாடும் சேவையில், வாகன உடமை மாற்றங்கள், வாகன பதிவுப்புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல், வாகனத்தின் நிறைச் சான்றிதழை பெறல், 

வாகன உடமை மாற்ற படிவங்களை கையேற்றல், சாரதி அனுமதிப் பத்திரப் பரீட்சை, விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரப் பரீட்சை, சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளல், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் மாற்றம் தொடர்பான விடயங்கள், 

சாரதி அனுமதி பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை, வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக்கொள்ளல், 2015ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழி அடிப்படையில் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான நிபந்தனை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் போக்குவரத்தில் உள்ள இடர்பாடுகள் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரடியாக கொழும்புக்குச் சென்று சேவைகளை பெற்றுக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மக்களுக்கு அருகில் இந்த சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவையை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை தொடர்பான மேலதிக விவரங்களை பிரதேச செயலகங்களில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவிலும்யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையத்திலும் வட மாகாண போக்குவரத்து பிரிவிலும் பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.

இது தொடர்பான ஊடக சந்திப்பின்போது வடமாகாண மோட்டார் திணைக்கள உதவி ஆணையாளர் இ.சிவகரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் ஆகியோரும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள நிர்வாக ஆணையாளர் சுசந்த ஜயதிலக, மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் சஞ்சீவனி மற்றும் காஞ்சனா பொன்சேகா ஆகியோர் பங்கேற்றனர்.