SuperTopAds

வடமாகாண ஆளுநரும் அரசியல் நிகழ்ச்சி நிரலிலா? தலையிடிக்கு மருந்து தலையணையை மாற்றுவதா? ஆசிரியர் சங்கம் காரசாரம்...

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநரும் அரசியல் நிகழ்ச்சி நிரலிலா? தலையிடிக்கு மருந்து தலையணையை மாற்றுவதா? ஆசிரியர் சங்கம் காரசாரம்...

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள ஆசிரியர் சங்கம் ஆளுநர் செயலகத்தை முடக்கி போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது. 

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் மேலும் கூறுகையில், 

வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஆசிரியர் இடமாற்றங்களை முறையற்ற விதத்தில் கையாண்டு வருகிறார். ஆசிரியர் இடமாற்றங்களில் தமக்கு வேண்டிய அவர்களை காப்பாற்றும் முகமாக 

மேன்முறையீடு என்ற போர்வையில் பலர் வெளி மாவட்டங்களுக்கு இதுவரை செல்லவில்லை. வடமாகாணத்தின் கல்வி பணிப்பாளர் 7 வருடங்களை தாண்டியும் 

அதே பதவியில் இருக்கின்ற நிலையில் வடக்கு கல்வியை சரியான முறையில் அவரால் கொண்டு செல்ல முடியவில்லை. வடமாகாணத்தில் தொண்டராசிரியர் என்ற போர்வையில் 

ஒருநாள் கூட பாடசாலையில் கடமையாற்றாத ஆசிரியர் ஒருவரை ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்கி உள்ளனர். இவர் வேறு யாரும் அல்ல வடக்கு கல்வி அமைச்சை வழிநடத்தும் 

தொழிற்சங்கம் ஒன்றின் செயற்பாட்டாளரின் அனுசரணையில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்.

வடக்கு கல்வி அமைச்சு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை பல வருடங்களாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுமத்தி வந்தது. வெறுமனே குற்றச்சாட்டுகளை சுமத்துவது மட்டுமல்லாது 

ஆதாரங்களுடன் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜவுக்கு வழங்கினோம். தலையிடிக்கு தலையணையை மாற்றியதுபோல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை ஆளுநர் மாற்றினார்.

கல்வி அமைச்சின் செயலாளரை மாற்றினால் மட்டும் வடக்கு கல்வியமைச்சின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. அமைச்சில் இடம்பெற்ற நிதி நிர்வாக மோசடிகளை 

ஒரு சுயாதீன விசாரணை ஆணைக்குழு முன் விசாரிக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை விசாரணை குழு நியமிக்கப்படவல்லை.

வடக்கு கல்வி அமைச்சின் அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெற்ற நிலையில் தற்போதய ஆளுநரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆளுநரும் அரசியல் நிகழ்ச்சியில் இயங்குகிறாரா? 

என்ற சந்தேகம் எழுகின்றது. மேலும் தற்போது 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆசிரியர் இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படாத நிலையில் 

ஏப்ரல் மாதம் இடமாற்றத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. பல வருடங்களாக வெளி மாவட்டங்களில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துவரும் ஆசிரியர்கள் 

தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வடக்கு கல்வியமைச்சில் இருக்கும் ஒரு சிலர் தமது சொந்த நலன்களுக்காக 

ஒரு பகுதியினரின் இடமாற்றத்தை புறக்கணித்து வருவதை இனியும் நாம் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறின் 

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை ஒன்றிணைத்து ஆளுநர் செயலகம் மற்றும் வடக்கு கல்வி அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எச்சரிக்கை விடுத்தார்.