யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவாலய தடை அடிப்படை உரிமை மீறல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவாலய தடை அடிப்படை உரிமை மீறல்..

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதைத் தடை செய்வது அடிப்படை உரிமை மீறலும் மனிதாபிமற்ற செயற்பாடாகும். அந்தச் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது - கண்டிக்கத் தக்கது என்று ஈபிஆர்எல்எப் தெரிவித்துள்ளது.

“போரில் தமது உறவுகளை நினைவுகூருவதற்கு மக்களுக்கு இருக்கு சுதந்திரத்தை தடுக்கும் செயலாக இதைப் பார்க்கவேண்டும். இளைஞர்கள் மத்தியில் விரக்தி - கோபம் - அரசுக்கு எதிரான சிந்தனைகளை உருவாக்குவது எல்லாமே இவ்வாறான அடக்குமுறைகள்தான் காரணமாக அமைகின்றன” என்று ஈபிஆர்எல்எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் பாரம்பரிய தலை நகரம். தமிழ் மக்கள் தமக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் எனப் போராடிப் பெற்றுக்கொண்டதுதான் யாழ்ப்பாண பல்கலைக்கழகம். 

தமிழ் மக்களின் உரிமைகள் - கலாசாரத்தை - பொருளாதார வளங்கள் -  வரலாறுகளைப் போதிக்கின்ற - போற்றிப் பாதுகாக்கின்ற அமைப்பாகத்தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திகழ்கின்றது. 

அவ்வாறானதொரு பல்கலைக்கழகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நினைவாலயம் அமைப்பதை அரசு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தடுப்பதை கட்டாயமாக கண்டிக்கவேண்டும். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கான நிதியை வழங்க மறுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நினைவாலயமே கட்ட முடியாது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

போரால் பல இலட்சம் உறவுகளை இழந்த மக்கள், ஒரு வருடத்துக்கு ஒரு முறை தமது உறவுகளுக்கு நினைவுகூர தமது மண்ணில் உள்ள பல்கலைக்கழகத்தில் நினைவாலயம் அமைப்பதைத் தடுப்பது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாகும்.

போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்த போது, ஐ.நா. அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டன. அவ்வாறு தடை செய்வது அடிப்படை உரிமை மீறல் என்பதை அவை சுட்டிக்காட்டின.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை, ஆசிரியர் சங்கம், மாணவர்கள் ஒன்றியம் உள்ளிட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து அமைப்புக்களும்  இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் விடயத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்லதொரு முடிவை எட்ட அழுத்தத்தை வழங்குவார்கள் என நம்புகின்றேன். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு