வலி.தெற்கின் புதிய தவிசாளர் வெளியிட்டுள்ள முக்கியத்துவ அறிவிப்பு

ஆசிரியர் - Admin
வலி.தெற்கின் புதிய தவிசாளர் வெளியிட்டுள்ள முக்கியத்துவ அறிவிப்பு

இன்றைய உலக புத்தகதின நிகழ்வில் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக நூலகர் அருளானந்தம் ஸ்ரீகாந்தலக்ஸ்மி வலி.தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நூதன சாலையொன்றை அமைப்பதற்குத் தான் விரும்புவதாகவும், இதற்குப் பொருத்தமானதொரு இடத்தை வழங்குமாறும் என்னிடம் கோரிக்கை விடுத்தார். 

வலி. தெற்குப் பிரதேசத்தில் எங்களுடைய உறுப்பினர்களின் ஆதரவுடன் நிச்சயமாக எமது பதவிக் காலத்தில் அவ்வாறானதொரு நூதனசாலை நிறுவப்படும் என வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் தெரிவித்தார்.

யாழ். சுன்னாகம் பொது நூலகத்தின் உலக புத்தக தின நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை(23) பிற்பகல் வலி.தெற்குப் பிரதேச சபையின் சுன்னாகம் உப அலுவலகப் பொறுப்பதிகாரி அ.சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராக்க கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நூதனசாலை நிறுவப்படுவது தொடர்பில் அவர் கோரிக்கை விடுத்துள்ள போதும் அவ்வாறு கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை. நூதனசாலை நிறுவ வேண்டியது எமது கடமை என்பதை நான் நன்குணர்ந்துள்ளேன்.எனவே, எங்களுடைய அடுத்த சந்ததி பயன்பெறும் வகையில் நூதனசாலை நிறுவப்படும். நூதனசாலை நிறுவுவதில் வரவுள்ள சவால்களை எதிர்கொண்டு உரிய முயற்சிகளை முன்னெடுப்பேன்.

வலி. தெற்குப் பிரதேச சபையின் முன்னைய ஆட்சிக் காலத்தில் காலாண்டுக்கு ஒரு தடவை எமது நூலகத்திலிருந்து வெள்ளிமலை என்ற சஞ்சிகை வெளியாகியது. இதன் பின்னர் பொருளாதாரம் மற்றும் வேறு சில காரணங்களால் குறித்த சஞ்சிகை வெளிவருவது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நூலகத்தில் இடம்பெற்ற ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முதன்முறையாக நானும் பங்குபற்றியிருந்தேன்.

அந்தக் கூட்டத்தில் வெள்ளிமலை சஞ்சிகை தொடர்ந்தும் வெளிவர வேண்டுமென்ற கோரிக்கையே பிரதானமாக விடுக்கப்பட்டிருந்தது. அந்த சஞ்சிகை தொடர்ந்தும் வெளிவர வேண்டுமென்பதில் நானும் உறுதியாகவிருக்கின்றேன்.

எங்களுடைய பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு நிச்சயம் ஆதரவு வழங்குவதில் என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கின்றது.

எங்கள் பிரதேச எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளிவருவதற்கு நாம் எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம். எங்கள் சமூகம் பயன்பெறும் நோக்கில் வெள்ளிமலை சஞ்சிகையை அடுத்த காலாண்டுப் பகுதியில் நாங்கள் வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம் .

இதற்கு அனைத்துத் தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு