வவுனியா வளாகத்திற்குள் பெளத்த விகாரை பிரச்சினைக்கு தீர்வு..

ஆசிரியர் - Editor I
வவுனியா வளாகத்திற்குள் பெளத்த விகாரை பிரச்சினைக்கு தீர்வு..

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு  முன்னெடுத்த முயற்சியால் ஏற்பட்ட குழப்ப நிலை சமரசப பேச்சுக்களால் சுமுக நிலைக்கு வந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் வவுனியா பொலிஸாரும் இன்று மாலை சிங்கள மாணவர்களுடன் பேசி, புத்தர் சிலை விவகாரத்தால் ஏற்பட்ட குழப்ப நிலையை சுமுக நிலைக்கு கொண்டு வந்தனர்.

வவுனியா வளாகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு அதற்கான கூட்டை நேற்று (23) அமைத்தனர். பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாது மாணவர்கள் மேற்கொண்ட இந்த முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.

இதன்போது சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. பார்க் வீதியுள்ள வளாக அலுவலகத்தின் வாயில் கதவைப் பூட்டி சிங்கள மாணவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனால் வவுனியா வளாகம் நேற்று முதல் காலவரையரையின்றி மூடப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா பொலிஸாருக்கும் வளாக முதல்வருக்கும் இடையே பேச்சு இடம்பெற்றது. புத்தர் சிலையை பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக முதல்வருக்கு பொலிஸ் அதிகாரி உறுதியளித்தார்.

அத்துடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்திலிருந்து சென்று சிங்கள மாணவர்களுடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டனர். அதனையடுத்து சிங்கள மாணவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

அத்துடன், புத்தர் சிலையை நிறுவுவதற்கான கூட்டையும் பொலிஸார் மீட்டுச் சென்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை முடிவுக்கு வந்தததால் வளாக கற்கைச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முதல்வர் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதால் அவர்கள் திரும்புவதற்கு அவகாசம் வழங்கப்படும் என தெரியவருகிறது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு