யாழ். மாநகர சபையின் மேயர் இ. ஆர்னோல்ட் உறுதி

ஆசிரியர் - Admin
யாழ். மாநகர சபையின் மேயர் இ. ஆர்னோல்ட் உறுதி

யாழ். மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் பணிகள் தென்னிலங்கைத் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ள செய்திகளை யாழ். மாநகர சபையின் மேயர் இ. ஆர்னோல்ட் முற்றாக மறுத்துள்ளதுடன் யாழ். மாநகரசபைத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் முன்னெடுக்க மாட்டேன் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (23) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் யாழ். மாநகர சபையில் ஆட்சியமைத்த கூட்டமைப்பு யாழ்.மாநகரை எழில்மிக்க நகராக மாற்றுவோம் எனக் கூறிக் கொண்டு சிங்கள ஊழியர்களை வேலைக்கு அமரத்தவுள்ளனர் எனப் பத்திரிகையொன்றில் நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான கலந்துரையாடல்கள் எனது மட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. அத்துடன் இந்தச் செய்தி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் ஊடாக வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மறுப்பை வெளியிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.

நான் பதவியேற்ற காலம் முதல் சுகாதாரத் தொழிலாளர்களுடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு