வங்கிகளின் பணம் ரூபா 80 இலட்சம் மோசடி - விசாரணை சிஐடிக்கு மாற்றம்

ஆசிரியர் - Admin
வங்கிகளின் பணம் ரூபா 80 இலட்சம் மோசடி - விசாரணை சிஐடிக்கு மாற்றம்

வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் மீள்நிரப்ப எடுத்து வரப்பட்ட பணத்தில் 80 இலட்சம் ரூபா மோசடி இடம்பெற்றமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் இன்று அறிவித்தனர்.

அதனால் அந்தப் பணத்தை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் 5 பேர் சார்பிலும் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் பதில் நீதிவான் வி.சிவலிங்கம் நிராகரித்தார்.

அனுராதபுரம் பகுதியில் இயங்குகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று யாழ்ப்பாணத்திலுள்ள வங்கிகளின் ஏ.ரி.எம் நிலையங்களுக்கு பணத்தை விநியோகம் செய்யும் பணியை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த மாதம் 9ஆம் திகதி அனுராதபுரத்திலிருந்து 11 கோடியே 74 இலட்சம் ரூபா பணத்தை 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அந்த நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தது.

உடுவில் பகுதிக்கு வந்து பணத்தை சரி பார்த்தபோது, அதில் 80 இலட்சம் ரூபா பணம் குறைவடைந்து காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பணத்தை எடுத்து வந்த வாகனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் சார்பில் அவர்களது சட்டத்தரணியால் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது.

“இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த விசாரணைகளை நீதிமன்றின் அடுத்த தவணையிலிருந்து முன்னெடுத்துச் செல்வர். அதுவரை சந்தேகநபர்களை விடுவிக்க ஆட்சேபனை தெரிவிக்கின்றோம்” என்று பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த பதில் நீதிவான், சந்தேகநபர்கள் 5 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு