அட்சய திருதியை நாளில் விழாக் கோலம் பூண்டுள்ள யாழ்.நகர்

ஆசிரியர் - Admin
அட்சய திருதியை நாளில் விழாக் கோலம் பூண்டுள்ள யாழ்.நகர்

அட்சய திருதியை நன்னாளை முன்னிட்டு யாழ்.நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் இன்றைய தினம்(18) விழாக்கோலம் பூண்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்சய திருதியை நாளில் நகைகள் கொள்வனவு செய்துவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காலை முதல் நகைக் கொள்வனவில் குவிந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

யாழின் முக்கிய வீதிகளான கஸ்தூரியார் வீதி, பிறவுண் வீதி, மின்சார நிலைய வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் அமைந்துள்ள நகைக்கடைகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நகைகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.

அட்சய திருதியை நன்னாளை முன்னிட்டு யாழ். நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள நகைக்கடைகள் முன்பாக பூரண கும்பங்கள் வைக்கப்பட்டு வாழை மரங்கள் நாட்டப்பட்டு, மகர தோரணங்கள் மற்றும் மாவிலைகள் கட்டப்பட்டுள்ளன.

அனைத்து நகைக்கடைகளிலும் நகைகளைக் கொள்வனவு செய்தமைக்காக விசேட அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டதுடன் சிற்றுண்டிகளும் பரிமாறப்படுவதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

சித்திரை மாதத்தில் அமாவாசை கழித்து வருகின்ற மூன்றாவது திதியில் அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழமையாகும்.

இதேவேளை, அட்சய திருதியை நன்னாளான இன்றைய தினம் அதிஷ்டமும், ஐஸ்வரியமும் மிகுந்த திருநாளாகும்.

இந்நாளில் தங்கம், வெள்ளி ஆகியவற்றினால் செய்யப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ய உகந்த நாளாக கருதப்படுவதுடன் அட்சய திருதியை அன்று ஆரம்பிக்கும் எந்தக் காரியமும் வளர்ந்து கொண்டிருக்கும் அல்லது பெருகிக் கொண்டேயிருக்கும் எனவும் நம்பப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு