பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துங்கள்-பிரதம பரிசோதகர் மீராமுகையதீன் அஸ்ரப்
சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு சுகாதார வழிமுறைக்கமைவாக சொறிக்கல்முனை 6ஆம் கொளனி மிலேனியம் பாலர் பாடசாலை வளாகத்தில் இன்று(1) இடம்பெற்றது.
இந்நிகழ்வானது சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் மீராமுகையதீன் அஸ்ரப் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது முதலில் இறை வணக்கம் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பதில் பொறுப்பதிகாரியின் உரை இடம்பெற்றன.
சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் மீராமுகையதீன் அஸ்ரப் பிரதம விருந்தினராக உரை நிகழ்த்தும் போது
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.தற்போது எதிர்காலம் மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது.படிப்புகளில் சிறுவர்கள் கவனம் செலுத்துவதும் குறைவு.மதுபோதை மற்றும் தொலைபேசி பாவிப்பதில் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.எனவே சிறுவயது முதல் எமது பிள்ளை செல்வங்களை பெற்றோர்களாகிய நாங்கள் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும்.சிறுவர்களுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் அடிக்க கூடாது.அவர்களை வேறு வழிமுறைகளில் வழிநடத்த முயல வேண்டும்.சிறுவர்களை அடித்து துன்புறுத்துவது பாரதூரமான குற்றமாகும்.சிறுவர்களுக்கென அரசாங்கத்தினால் பாதுகாப்பு சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதை விட ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர்களுக்கென பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதனூடாக சிறுவர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற முடியும் என குறிப்பிட்டார்.
பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கு உணவுகள் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சவளக்கடை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எம். ஜவ்பர் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு பொறுப்பதிகாரி ரேகா சார்ஜன்ட் ஜெயசுந்தர மற்றும் சொறிக்கல்முனை -3 கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.ஜெயப்பிரசன்னா உட்பட ஆசிரியர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.