யாழ்.மாநகர சபை கன்னி அமர்வில் சிவஞானம் மீது ஊழல் குற்றச்சாட்டு

ஆசிரியர் - Admin
யாழ்.மாநகர சபை கன்னி அமர்வில் சிவஞானம் மீது ஊழல் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ்.மாநகர முதல்வராக கடந்த காலத்தில் பதவி வகித்த போது யாழ்நகரில் உரிய அனுமதி பெறப்படாமல் கட்டிய கடைத் தொகுதியினை தெரிந்தவர்களுக்கு வழங்கியமை, ஆலயங்களுக்குச் சொந்தமான காணிகளை தனது பெயருக்கு மாற்றியமை போன்ற பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்று யாழ்.மாநகர சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன், இக் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் கன்னி அமர்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊழல் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் பேசுகையில் 

தற்போதைய வடமாகாண சபையின் அவைத் தலைவரும் முன்னாள் யாழ்.மாநகர சபை முதல்வருமான சி.வி.கே.சிவஞானத்தின் காலப்பகுதியில் யாழில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம், அதிகாரிகளின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாமலும் உரிய முறையில் கேள்விப் பத்திரங்கள் கோரப்படாமலும், நிர்மாணிக்கப்பட்டு தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாக மக்கள் மத்தியில் பல விசனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த அந்த 6 கடைத் தொகுதி கட்டப்பட்ட விடயத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக மக்கள் மத்தியில் கருத்துகள் உள்ளன. எனவே, மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட, மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்கு அந்த ஊழல் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்து, மக்களுக்கு உண்மையினை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உண்டு.

இதுமட்டுமல்லாமல் முன்னைய ஆணையாளர்களினால் ஒரு சிலர் கோவில் காணிகளில் சோலை வரியை தமது பெயருக்கு மாற்றியுள்ளார்கள். அவ்வாறு சோலை வரி பெயர் மாற்றம் எவ்வாறு நடைபெற்றது என்பது தொடர்பிலும் முதல்வர் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு