போதை பாக்கு விற்பனை செய்த 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

ஆசிரியர் - Editor I
போதை பாக்கு விற்பனை செய்த 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய மாவா போதைப் பொருள் விற்பனை நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட 7 பேரை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு மாவா போதைப் பொருளை விநியோகிக்கும் பிரதான நபர் புத்தளத்தில் உள்ளார் எனவும் அவர் உள்பட மேலும் சிலரைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றுக்கு  அறிவித்தனர்.

வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோவின் பணிப்புக்கமைய, யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய மாவா போதைப் பொருள் விற்பனை நிலையம் சிறப்புப் பொலிஸ் குழுவால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு விற்பனைக்கு தயாராகவிருந்த பெருமளவு மாவாப் போதைப் பொருள் பொட்டளங்கள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டது. அத்துடன், அந்த வியாபார நிலையத்தில் கடமையாற்றிய குற்றச்சாட்டில் 3 பேரும் மாவா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில், சந்தேகநபர்கள் 7 பேருக்கும் எதிராக தனித்தனியே முதல் அறிக்கை முன்வைத்து பொலிஸார் முற்படுத்தினர்.

“இந்த போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை மாகாண மூத்த பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. மாவா போதைப் பொருள் விற்பனை வலையமைப்பை யாழ்ப்பாணக் குடாநாட்டில் முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வியாபாரத்தில் ஈடுபடும் புத்தளத்தில் வசிக்கும் முக்கிய சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். எனவே இந்த சந்தேகநபர்கள் 7 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்றிடம் கோருகின்றோம்” என்று பொலிஸார் விண்ணப்பம் செய்யதனர்.

முதல் அறிக்கையை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் 7 பேரையும் வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு