யாழில் ஏழு செயலக பிரிவுகளில் சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை

ஆசிரியர் - Admin
யாழில் ஏழு செயலக பிரிவுகளில் சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை

வடமாகாணத் தொழிற் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ். குடாநாட்டின் ஏழு பிரதேச செயலர் பிரிவுகளில் நாளை புதன்கிழமை(11) சித்திரைப் புத்தாண்டு விசேட விற்பனைச் சந்தைகள் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக தொழிற்துறை திணைக்கள மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெல்லிப்பழைப் பிரதேச செயலகம்,கோப்பாய்ப் பிரதேச செயலகம், சங்கானைப் பிரதேச செயலகம், ஊர்காவற்துறைப் பிரதேச செயலகம், நல்லூர்ப் பிரதேச செயலகம் , சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகம், பருத்தித்துறைப் பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் குறித்த சித்திரைப் புத்தாண்டு விசேட விற்பனைச் சந்தைகள் இடம்பெறவுள்ளன.

தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் சித்திரைப் புத்தாண்டுச் சந்தை மல்லாகம் காங்கேசன்துறை வீதியிலுள்ள சகாயமாதா தேவாலய வளாகத்திலும், கோப்பாய்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் சித்திரைப் புத்தாண்டுச் சந்தை பிரதேச செயலக முன்றலிலும், சங்கானைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சித்திரைப் புத்தாண்டுச் சந்தை சங்கானை மத்திய பேருந்து நிலையம் அருகாமையிலும், ஊர்காவற்துறைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் சித்திரைப் புத்தாண்டுச் சந்தை பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவிலும் நடைபெறவுள்ளன. நல்லூர்ப் பிரதேச செயலகத்தின் சித்திரைப் புத்தாண்டுச் சந்தை நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பின் வீதியிலுள்ள றியோ கிறீம் ஹவுஸ் அருகிலும், சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தின் சித்திரைப் புத்தாண்டுச் சந்தை பிரதேச செயலக வளாகத்திலும், பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தின் சித்திரைப் புத்தாண்டுச் சந்தை பிரதேச செயலக வளாகத்திலும் இடம்பெறவுள்ளன.

குறித்த சித்திரைப் புத்தாண்டுச் சந்தைகள் முற்பகல்-10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள குறித்த சந்தைகளில் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு யாழ்.மாவட்டச் செயலக தொழிற்துறை திணைக்கள மாவட்ட அலுவலர் கேட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு