யாழ். நகர நகைக்கடைகளில் நூதன முறையில் பலநாள் நகை திருடிய பெண் மடக்கிப் பிடிப்பு

ஆசிரியர் - Admin
யாழ். நகர நகைக்கடைகளில் நூதன முறையில் பலநாள் நகை திருடிய பெண் மடக்கிப் பிடிப்பு

யாழ். நகரில் பல நகைக்கடைகளில் பலநாட்களாக நூதன முறையில் நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் மீண்டும் தனது கைவரிசையைக் காட்ட முற்பட்ட போது மடக்கிப் பிடிக்கப்பட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

இச்சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(08) பிற்பகல் யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் கடந்த சில மாதங்களாக யாழ்.நகரிலுள்ள நகைக்கடைகளுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். நகைக்கடைகளில் நகைகளைக் கொள்வனவு செய்வது போல் குறித்த பெண் பாசாங்கு செய்வார். 

ஆனால், நகைகள் எவற்றையும் கொள்வனவு செய்ய மாட்டார். அவர் அங்கிருந்து சென்ற பின் அவர் பார்வையிட்ட நகைகளிலொன்று காணாமல் போயிருக்கும். இது வழமையான நிகழ்வாகவிருந்து வந்தது.

இந்த நிலையில் திருட்டுப் போன நகைக்கடை உரிமையாளர்கள் உஷாரடைந்தனர். இது தொடர்பில் ஏனைய நகைக்கடைக்காரர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்களை விழிப்படையச் செய்தனர்.

இவ்வாறான நிலையில் குறிப்பிட்ட பெண்மணி நேற்றுப் பிற்பகல் யாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் வழமை போன்று மீண்டும் தனது கைவரிசையைக் காட்ட முற்பட்ட போது நகைக்கடையில் வேலை செய்பவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை, மேற்படி நகைக்கடையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னரும் பட்டப்பகல் வேளையில் நகைத்திருட்டுப் பதிவாகியிருத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு