வலி.வடக்குப் பிரதேச சபையில் தன்மானத்தை வெளிப்படுத்திய தமிழர் சம உரிமை இயக்கம்!

ஆசிரியர் - Admin
வலி.வடக்குப் பிரதேச சபையில் தன்மானத்தை வெளிப்படுத்திய தமிழர் சம உரிமை இயக்கம்!

யாழ்.  வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை (02) இடம்பெற்ற தவிசாளர் தெரிவுக்கான அமர்வில் தமிழ்த் தேசியப் பேரவையின் பங்காளிக் கட்சியான தமிழர் சம உரிமை இயக்கம் பிற கட்சிகளின் தயவின்றி, தனித்து நின்று தன்மானத்தை வெளிப்படுத்தியது.

தவிசாளர் தெரிவுக்காகப் போட்டியிட்ட தாயுமானவர் நிகேதன் ஆறு வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சு.சுகிர்தன், ஈ.பி.டி.பியினர், ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியைத் தனதாக்கியது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவையில் இணைந்து போட்டியிட்ட பங்காளிக் கட்சியான தமிழர் சம உரிமை இயக்கம் வடக்கு – கிழக்கில் பல வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

அதிலும், வலி.வடக்கு பிரதேச சபை மற்றும் காரைநகர் பிரதேச சபைகளில் தமிழர் சம உரிமை இயக்கம் முற்றுமுழுதாகத் தமது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது. இதில் வலி.வடக்கு பிரதேச சபையில் அக்கட்சி ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் மேற்படி பிரதேச சபைக்குத் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவுசெய்வதற்கான அமர்வு இன்று திங்கட்கிழமை(02) வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தா.நிகேதனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சு.சுகிர்தனும் தவிசாளராக பிரேரிக்கப்பட்டனர்.

ஈ.பி.டி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் ஆதரவுடன் 30 வாக்குகளைப் பெற்று சுகிர்தன் தவிசாளராகத் தெரிவானார். தமிழர் சம உரிமை இயக்கத்தின் வேட்பாளர்கள் ஆறு பேர் மட்டும் நிகேதனுக்கு வாக்களித்தனர்.

தொடர்ந்து பிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பொ.இராசேந்திரம் தெரிவுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு