ஈ.பி.டி.பி ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றவில்லை!: யாழ். மாநகர புதிய மேயர் அதிரடி

ஆசிரியர் - Admin
ஈ.பி.டி.பி ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றவில்லை!: யாழ். மாநகர புதிய மேயர் அதிரடி

உண்மையில் யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிரங்கமாக ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் ஈ.பி.டி.பி ஆதரவுடன் நாங்கள் யாழ். மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றினோம் என்ற கருத்தில் எந்த வித உண்மையுமில்லை. 

ஈ.பி.டி.பி கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டவர் ஒருவேளை மீண்டும் என்னுடன் போட்டியிட்டிருந்தால் அவர் தோல்வியையே எதிர்நோக்கியிருப்பார் என்பதே யதார்த்தம். ஆகவே, மீண்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது நேரத்தை வீணடிக்கும் செயல் என அவர்கள் அறிந்து வைத்திருந்தமையாலேயே போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர் என யாழ். மாநகர சபையின் புதிய மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் புதிய மேயராகத் தெரிவான பின்னர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இவ்வாரத் தினகரன் வாரமஞ்சரிக்கு கன்னிப் பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.

குறித்த பேட்டியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழமையாக ஈ.பி.டி.பி தொடர்பில் பல்வேறு கடுமையான விமர்சனங்களை கடந்த காலங்களில் பகிரங்கமாகத் தொடர்ச்சியாக முன்வைத்து வந்துள்ளது.குறிப்பாக ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மீது நடாத்தப்பட்ட தாக்குதல் வழக்குத் தொடர்பான தீர்ப்புக் கூட சமீபத்திலேயே வெளியாகியிருந்தது. 

இவ்வாறான நிலையில் ஈ.பி.டி.பியினரின் ஆதரவுடன் நீங்கள் யாழ். மாநகர சபையில் ஆட்சியமைத்துள்ளமை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலை காணப்படுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன? என ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈ.பி.டி.பி மீது எங்களுக்கு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள் காணப்பட்டது என்பதை யாருமே மறுக்க முடியாது. தேர்தல் மேடைகளில் இது தொடர்பில் பகிரங்கமான கருத்துக்கள் பேசப்பட்டமையும் பலரும் அறிந்ததே .

ஏனைய கட்சியினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் எனக் கருத்துக்கள் வெளியிட்டிருந்தார்களே தவிர மாநகர முதல்வர் தெரிவின் போது எங்களுக்கு வாக்களியுங்கள் என நாங்கள் எந்தக் கட்சியினரிடமும் கோரிக்கைகள் விடுக்கவில்லை. 

எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்துடன் காணப்படுகின்ற சபைகளில் ஆதரவளிக்காவிட்டாலும் எதிர்க்காமல் மக்களுடைய நலன்களுக்காக சேர்ந்து பணியாற்றுவதற்கே எமது தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

ஆகவே, யாழ். மாநகர முதல்வராக நான் தெரிவானமை விட்டுக் கொடுப்பால் இடம்பெற்றதொரு விடயமென என்னால் எப்போதும் கருத முடியாது.

நாங்கள் எங்கள் சிந்தனைகளில் எப்போதும் தெளிவாகவேயிருக்கின்றோம். எங்கள் மக்களின் நலன்களுக்காக நாங்கள் எல்லோருமே இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் மீறிச் செயற்பட மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு