அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சாதனை! VIDEO

ஆசிரியர் - Admin
அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சாதனை! VIDEO

நான் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைவேன் என எதிர்பார்த்திருந்த போதும் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் முதலாமிடம் பெறுவேன் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

இவ்வாறானதொரு சிறந்த பெறுபேறு பெற்றுள்ளமையை எனது வாழ்வின் மிகச் சிறந்த தருணமாக உணர்கிறேன் என வெளியாகியுள்ள க.பொ. த சாதாரணதரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ள யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மிருதி சுரேஷ்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுப் புதன்கிழமை(28) இரவு வெளியாகியுள்ளது. குறித்த பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மிருதி சுரேஷ்குமார் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் முதலிடம் பெற்றுக் கல்லூரிச் சமூகத்திற்கும், ஒட்டுமொத்த ஈழத் தமிழ்மக்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

சாதனை மாணவி மிருதி சுரேஷ்குமாரின் சாதனை தொடர்பில் எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் விசேடமாக வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் வசித்து வருகின்றேன். எனது அம்மா வீட்டுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்பா வர்த்தக நிலையமொன்றை நடாத்தி வருகிறார். எனக்கு இரு தங்கைமார்கள் உள்ளனர்.

எனது அம்மாவும், அப்பாவுமே இத்தகைய எனது சாதனைக்கு ஊன்றுகோலாகச் செயற்பட்டிருக்கிறார்கள். ஆகவே, எனது சாதனையை பெற்றோர்களுக்குச் சமர்ப்பிப்பதுடன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் சாதனைக்குப் பாடசாலைக் கல்வியே முக்கிய பலமாக இருந்துள்ளது. ஆகவே, வெற்றிக்கு வழிகாட்டிகளாகச் செயற்பட்ட அதிபர், வகுப்பாசிரியை ஜெயப்பிரியா, ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது எதிர்கால இலட்சியம் வைத்தியராகித் தமிழ்மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே ஆகும் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு