பல கட்சி ஆதரவுடன் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையில் ஆட்சியமைத்த கூட்டமைப்பு!

ஆசிரியர் - Admin
பல கட்சி ஆதரவுடன் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையில் ஆட்சியமைத்த கூட்டமைப்பு!

வலிகாமம் மேற்குப் பிரதேச சபைக்குத் தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை (28) பிற்பகல்-02 மணி முதல் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு என்பவற்றின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

25 உறுப்பினர்களை மொத்தமாகக் கொண்ட வலி.மேற்குப் பிரதேச சபைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒன்பது உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் ஆறு உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி சார்பில் நான்கு உறுப்பினர்களும் , ஐக்கியதேசியக் கட்சி சார்பில் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சைக் குழு சார்பில் இரு உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும் தெரிவாகியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சபைக்குத் தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான இன்றைய முதல் அமர்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடனேந்திரனையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ரஜீவனையும் முதல்வர்களாக முன்மொழிந்தன.

வாக்கெடுப்பின்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பகிரங்க வாக்கெடுப்பைக் கோரியிருந்தது. இதனடிப்படையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நடனேந்திரனுக்கு அவரோடு இணைந்து அக்கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள்,சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் மற்றும் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் மொத்தமாக 19 பேர் வாக்களித்தனர். இதன்போது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஆறு பேரும் ரஜீவனுக்கு வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. இதன் போது கூட்டமைப்பைச் சேர்ந்த வே.சச்சிதானந்தத்தை கூட்டமைப்பு உறுப்பினரான சிவசுப்பிரமணியம் முன்மொழிய ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த குணசிறி வழிமொழிந்தார்.

வேறு தெரிவுகள் ஏதுமின்மையால் சபையின் உபதவிசாளராக சச்சிதானந்தம் தெரிவானார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு