யாழில் இராணுவம் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்வது வேடிக்கை! : சஜீவன் காட்டம்

ஆசிரியர் - Admin
யாழில் இராணுவம் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்வது வேடிக்கை! : சஜீவன் காட்டம்

தமிழர்களைத் தொடர்ந்தும் அழித்து ஒரு இன அழிப்பைச் செய்துவரும் இராணுவத்தினர் யாழில் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்துவருவது வேடிக்கையாகவுள்ளது என வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உறுப்பினரும், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார்.

இராணுவம் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்து வருவது தொடர்பாக இன்று (24) வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களைத் தொடர்ந்து அழிப்பதும் தமிழர்களின் வளமான நிலங்களை அபகரித்துச் சிங்களக் குடியேற்றங்கள், புத்த விகாரைகளை அமைத்து ஒரு இன அழிப்பைச் செய்துவரும் இராணுவத்தினர் யாழில் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்துவருவது வேடிக்கையாக உள்ளது.

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் நிலத்தை அபகரித்து வைத்திருக்கும் இராணுவம் யுத்த முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்திலிருந்த 22 இற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களையும் 10 கிறிஸ்தவ ஆலயங்களையும் இடித்து நிலத்துக்குள் புதைத்த வரலாற்றை மறைக்கப்பார்க்கிறார்களா?

20 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதிகளாகவும், மூன்று கிராமசேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் 4 ஆயிரத்து 148 ஏக்கர் மக்களுடைய நிலத்தை அபகரித்து விளையாட்டு மைதானம் இராணுவக் குடும்பங்களுக்கான உல்லாச விடுதிகளை அமைத்தும் அனுபவித்தும் வருகின்றனர். இவ்வாறு செய்பவர்கள் எவ்வாறு இந்து ஆலயங்களுக்கு உதவி செய்யமுடியும்?

விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் கல்வியைத் தொடரமுடியவில்லை. குறிப்பாக பலாலி சித்திவிநாயகர் வித்தியாலயம் , பலாலி வடக்கு அரச தமிழ்க்கலவன் பாடசாலை, காங்கேசன்துறை மகாவித்தியாலம், வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம், காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் வகுப்பறைக் கட்டடம் குடிநீர்க்கிணறு போன்றவை இன்னும் இராணுவத்தினர் கையிலுள்ளது.

மேலும், யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய இராணுவ முகாமிற்கு காணிகள் தேவை என தமிழ்மக்களின் காணிகள் அபகரித்தல் இவற்றுக்கு எதிராக நாங்கள் போராடுவது சம்பிராதய பூர்வமாக மாறிவிட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இராணுவம் உதவி செய்வது வெந்த புண்ணில்வேல் பாய்ச்சுவது போலுள்ளது. உங்களால் எத்தனை போராளிகள் சிதைக்கப்பட்டார்கள் பெண் போராளிகள் எவ்வாறு சிதைக்கப்பட்டார்கள் உதாரணமாக இசைப்பிரியாவின் சம்பவம் இவற்றைச் சர்வதேசமும் உணர்ந்துள்ளது.

இவ்வாறிருக்கும் போது சமாதானம், சகோதரத்துவம், நல்லிணக்கம் எப்படிச் சாத்தியமாகும்? போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத் தளபதிக்குப் பொது மன்னிப்பு பாராளுமன்றப் பதவிகள் வழங்கிக் கௌரவிக்கும் போது அப்பாவித் தமிழர்கள் சிலர் அரசியல் கைதிகளாக சிறைச்சாலையில் காணப்படுவதுடன், அவர்களது குடும்பங்கள் தெருவில் இப்படி இருக்கும் நிலையில் உங்கள் பேச்சானது முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போலுள்ளது.

முதலில் உங்களைத் திருத்துங்கள். தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களிடம் ஒப்படையுங்கள் நாங்களே எங்கள் வாழ்வை வளமாக மாற்றிக் கொள்ளுவோம்.

யுத்தம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தமிழ்மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் அவர்களது நிதியுதவியின் கீழ் எமது மக்கள் மறுமலர்ச்சி அடைந்து வருகின்றார்கள்.

பொய்யான பேச்சுக்களைப் பேசிச் சர்வதேசத்திலிருந்து தப்பிப்பதை விடுத்து ஆக்கபூர்வமாக யோசித்துப் போர்க்குற்றம் செய்த இராணுவத்தினரை தண்டிப்பதற்கும், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தாலே ஏனைய விடயங்கள் இயல்பாகவே நடைபெறும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு