தமிழர் பகுதிகளில் உள்ளுராட்சி ஆட்சி!: யாழ். வணிகர் கழகம் முக்கிய வேண்டுகோள்

ஆசிரியர் - Admin
தமிழர் பகுதிகளில் உள்ளுராட்சி ஆட்சி!: யாழ். வணிகர் கழகம் முக்கிய வேண்டுகோள்

கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலிலே ஒரிரு சபைகளை விட மற்றைய எந்தச்சபையிலும், எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மைப் பெறமுடியாத நிலையிலே கூடிய உறுப்பினர்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க ஏனைய தமிழ்க் கட்சிகள் தங்கள் ஆதரவை நல்க வேண்டும் என யாழ். வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ்.வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாம் இது சம்பந்தமாக தமிழ்மக்களின் உரிமைக்காகப் போராடும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தியிருந்தோம். அந்த அடிப்படையில் அவர்கள் செயற்படுவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

எந்தக்கட்சி ஆட்சி அமைத்தாலும் நாம் அதனை வரவேற்கின்றோம்.ஆனால், ஆட்சி அமைக்கும்போது இன்னோர் கட்சியின் முழு ஆதரவையும் பெற்று ஆட்சி அமைப்பதையே தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதனை விடுத்து ஒரு கட்சியை உடைத்து அதில் சில உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல.

அவ்வாறு அமைக்கப்படும் ஆட்சி ஒருபோதும் பலமான, நிலையான ஆட்சியாக அமையப் போவதுமில்லை. இதனால் பாதிக்கப்படப்போவது சம்பந்தப்பட்ட கட்சிகளைவிட தமிழ் மக்களே. எனவே, எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்கும் விடயத்தில் தமிழ் மக்களின் நலனையே கவனத்தில் கொள்ளவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

உள்ளூராட்சி சபைகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும், நீதியான, நேர்மையான, ஆட்சியை நடாத்துவதற்கு எல்லா உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதுடன் கடந்த தேர்தலில் வடமாகாணத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் கட்சிகளுக்கு அப்பால் தேசிய கட்சிகள் இங்கே கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது எதிர்காலத்தில் எமது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் தேசியக் கட்சிகளின் வளர்ச்சி தமிழ் மக்களின் 70 ஆண்டுகால உரிமைப் போராட்டத்திற்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

தமிழ்மக்களுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்திற்காக தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் கட்சிகள் ஒன்றாக செயற்படுவதே எமக்குரிய தீர்வு கிடைப்பதற்கு வழி வகுக்கும். தமிழ்க்கட்சிகள் எமக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரையாவது ஒன்றாக செயற்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை ஒருபுறம் தமக்குரிய உரிமைக்காக போராடுவதற்கு ஆதரவு வழங்குவதுடன் மறுபுறம் தங்களுடைய வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு போன்றவற்றையும் எதிர்பார்த்து நிற்கிறார்கள். இதைக் கடந்த காலங்களில் பல தமிழ் கட்சிகள் செய்யத்தவறியுள்ளன. வேலைவாய்ப்பிற்காகவும, வாழ்வாதாரத்திற்காகவும் தமிழ் மக்கள் தேசிய கட்சிகளை ஆதரிப்பதைக் கடந்த தேர்தலின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஆகையால், எதிர்காலத்தில் தமிழ் கட்சிகள் தமிழ்மக்களுடைய உரிமைக்காகப் போராடுவதுடன், அவர்களுடைய வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் இந்த விடயங்களைக் கவனத்தில் எடுத்து ஒற்றுமையாகவும், தமிழ்மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்திலும் செயற்பட வேண்டும் என யாழ். வணிகர் கழகம் வேண்டி நிற்கின்றது எனவும் யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு