பொது இடங்களில் குப்பைகளை வீசுவோரை மக்களால்தான் தடுக்க முடியும் - முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

ஆசிரியர் - Admin
பொது இடங்களில் குப்பைகளை வீசுவோரை மக்களால்தான் தடுக்க முடியும் - முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

“பொது இடங்களில் கழிவுப்பொருள்களை வீசுபவர்களை அந்தப் பகுதி மக்களே தடுக்க முடியுமே தவிர, எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும் அதனைத் தடுக்க முடியாது” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட கோப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை கட்டடத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

கோப்பாய் தொகுதி ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் தேசியத்துடன் ஒன்றித்ததாக புகழ்பூத்த அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதியாக இருந்து வந்துள்ளது.

இந்தப் பிரதேச மக்கள் அமைதியை விரும்பியவர்கள். தமிழ் தேசியக் கொள்கைகளுக்கு இணங்கியவர்கள்.

இன்று திறந்துவைக்கப்படும் இந்த மீன் சந்தை கோப்பாய் சந்திக்கு மிக அண்மையாக கைதடி – மானிப்பாய் வீதி மற்றும் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதிகள் சந்திக்கு பகுதியில் அமைந்திருக்கின்றது. இதன்மூலம் இந்தப் பாதைகள் ஊடாகப் பயணிப்பவர்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளைப் பெற்றுச் செல்ல வாய்ப்பாக இந்தச் சந்தை அமையும்.

எத்தனை கட்டடங்களை எவ்வளவு அழகுற அமைத்தாலும் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் துப்புரவாக – முறையாகப் பயன்படுத்தும் போதுதான் அந்தக் கட்டடம் அழகு குன்றாமல் நீண்டகாலத்துக்கு இருக்கும்.

எனவே இந்தக் கட்டடத்தின் பராமரிப்பு அத்தியாவசியமானது என நினைவுறுத்த விரும்புகிறேன். வெற்றிலை மென்றுவிட்டுத் துப்புதல், சுண்ணாம்பை சுவர்களில் தடவுதல் போன்றவற்றை நாம் தவிர்க்க முன்வரவேண்டும். புதிய கலாச்சாரம் எம்மிடையே மலரவேண்டும்.

வலி.கிழக்கு பிரதேச சபை,
இந்தச் சந்தைக் கழிவுகளை தினமும் உரிய முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எத்தனையோ தடவைகள் நாம் அறிவுறுத்துகின்ற போதும் கோப்பாய் – கைதடி வீதியின் கரையோரங்களில் தலைமுடிக் கழிவுகளையும் இறைச்சிக் கழிவுகளையும் மற்றும் திண்மக் கழிவுகளையும் உரப்பைகளிலிட்டு எந்தவித மனக்கிலேசமுமின்றி வீசிவிட்டுச் செல்வதை எமது மக்கள் தவிர்க்கவேண்டும்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை இப்பகுதி மக்கள் இனங்கண்டு,  அவர்களின் தவறான செயற்பாடுகளை அவர்களுக்கு உணர்த்தி, அவர்களை வெளிக்கொணர்ந்தாலன்றி எத்தனை சட்டங்களைக் கொண்டு வந்தும் இதனைக் கட்டுப்படுத்த முடியாது – என்றார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனின் குறித்தொதுக்கப்படம 20 லட்சம்ரூபா நிதியில்ல் இந்த மீன் சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டது.

வலி. கிழக்கு பிரதேச சபை செயலாளர் யுகராஜா ஜெலீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மீன் சந்தையை சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்.

மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு