காணாமற்போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் உச்சி வெயிலில் ஜனாதிபதியை சந்தித்த மேலும் சில படங்களை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

ஆசிரியர் - Admin
காணாமற்போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் உச்சி வெயிலில் ஜனாதிபதியை சந்தித்த மேலும் சில படங்களை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் துணை முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட திலீபன் தீசன் மற்றும் காணாமற்போரின் உறவுகள் சார்பில் தாயார் ஒருவர் ஜனாதிபதியுடன் உச்சி வெயிலில் நின்று பேசும் படங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கல்லூரி வளாகத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் மூவர் சந்தித்தனர்.

நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் தம்மை சந்திப்பதற்காக முன்னறிவித்தலின்றி சென் பற்றிக்ஸ் கல்லூரியின் வளாகத்துக்குள் வருகை தந்திருந்த, அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட காணாமற்போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை, சந்தித்ததோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சட்டதிட்டங்களுக்கமைய அமைக்கக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகத்தினூடாக நியாயமான தீர்வுகள் அவர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன்போது தெரிவித்தார். 

மேலும், அன்றைய தினம் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு காணாமற்போனோரின் உறவினர்களால் ஏற்கனவே வேண்டுகோள் எதுவும் விடுக்கப்பட்டிராத நிலையிலேயே இந்த சந்திப்பிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதி, காணாமற்போனோரின் உறவினரை சந்திப்பதற்காக நேரத்தை ஒதுக்கிவிட்டு, அவர்களை சந்திக்காமலே சென்றுவிட்டார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்பதோடு, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதற்காகவும், ஜனாதிபதி மீது அவதூறு பரப்புவதற்காகவும் இந்தச் செய்தி திட்டமிட்ட முறையில் விசமிகள் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று கடுமையான வார்த்தைப் பிரயோகத்தில் அறிக்கை வெளியிட்டது.

அத்துடன், ஜனாதிபதி செயலகத்தால் நேற்று அனுப்பிவைக்கப்பட்ட ஒரே ஒரு ஒளிப்படத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர், காணாமற்போரின் உறவினர்கள் சார்பில் சந்தித்த பிரதிநிதியை கைநீட்டி தடுப்பதாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் மேலும் சில ஒளிப்படங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அனுப்பிவைத்துள்ளது.

இதேவேளை, சந்திப்பதாக எம்மை அழைத்த ஜனாதிபதி, கடைசி நேரத்தில் தம்மை சந்திக்காமலேயே சென்றுவிட்டார் என காணாமற்போனோர் சார்பில் அருட்தந்தை சக்திவேல் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு