குப்பிளான் தெற்கில் தொடர் திருட்டு முயற்சி பொதுமக்களால் முறியடிப்பு!

ஆசிரியர் - Admin
குப்பிளான் தெற்கில் தொடர் திருட்டு முயற்சி பொதுமக்களால் முறியடிப்பு!

யாழ்.குப்பிளான் தெற்கின் ஒரு பகுதியில் நேற்று அதிகாலையும், நேற்று இரவும் இடம்பெறவிருந்த தொடர் திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குப்பிளான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறுக்குள் நேற்று அதிகாலை(23) நீர் இறைப்பதற்காக விடப்பட்டிருந்த பைப் வெளியே எடுக்கப்பட்டு அதன் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த புட்பால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழமைக்கு மாறாக நாய்களின் சத்தம் காணப்பட்டமையால் விழித்தெழுந்த அயல் வீட்டுக்காரர் வெளியே வந்து பார்த்த போது வெட்டி எடுக்கப்பட்ட புட்பாலை மாத்திரம் எடுத்துக் கொண்டு திருடர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

திருடிய பொருளின் ஒரு சிறு பகுதி சுமார் நூறு மீற்றருக்கு அப்பாலுள்ள வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள சிலர் இணைந்து தேடுதல் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் குப்பிளான் வீரமனைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்சார வயர்களுக்குத் திருடர்களால் தடிகள் எறியப்பட்டுள்ளது. இதனால், மின்சாரத்தில் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் இணைந்து வெளியே வந்து பார்த்த போது வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தின் பின்பக்கமாகவுள்ள மண்டபப் பகுதியிலிருந்து திருடர்கள் சிலர் கூக்குரலிடும் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இது தொடர்பாக உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைந்து அப்பகுதியில் திருடர்களைத் தேடி வலை விரித்துள்ளனர். எனினும், திருடர்கள் யாரும் அகப்படவில்லை.

எனினும் திருடர்கள் குறித்த பகுதிக்கு வந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்திற்கருகில் அமைந்துள்ள வீடொன்றை நோக்கித் திருடனொருவன் ரோச் லைட் அடித்துள்ளதுடன், தேடுதல் மேற்கொள்ள ஆரம்பித்த போது மோட்டார்ச் சைக்கிளில் ஹெல்மட்டால் முகத்தை மறைத்துக் கொண்டு அப்பகுதியால் கடும் வேகத்தில் ஒருவன் சென்றதை அவதானித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் தற்போது பெரும்போக தோட்டச் செய்கை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் திருடர்கள் மறைந்து கொள்வதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

எவ்வாறான போதும் குறித்த பகுதிப் பொதுமக்களின் உடனடிக் செயற்பாடு காரணமாக அப்பகுதியில் இடம்பெறவிருந்த தொடர் திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு