SuperTopAds

இலங்கைக்கு மீண்டும் கால அவகாசமா..? ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிக்கிறது சர்வதேச மன்னிப்புசபை..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கு மீண்டும் கால அவகாசமா..? ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிக்கிறது சர்வதேச மன்னிப்புசபை..

இலங்கை ஆட்சியாளர்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக ஒருபோதும் அமையாது. என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புசபை கூறியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், 

இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் ஏதுவான வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 

தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான 

தீவிர ஒடுக்குமுறை குறித்து அவதானம் செலுத்தியிருக்கிறோம். அதுமாத்திரமன்றி இன மற்றும் மதரீதியான சிறுபான்மை சமூகங்களின் மீது தொடர்ந்து பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளும் எமது கரிசனைக்கு உள்ளாகியிருக்கிறது.

அத்தோடு பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிக்கின்றோம். 

குறிப்பாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் உரியவாறான பாதுகாப்பை வழங்கிய சில முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.