அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து..! வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலி..
பாரவூர்தி ஒன்றை நிறுத்தி ஆவணங்களை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் பொலிஸார் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் கொழும்பு இராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. வெலிகடை மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மித மிஞ்சிய வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் பொலிஸார் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் 52 வயதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பாரவூர்தியின் நடத்துனர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் தலவத்தகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை
வெலிகடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதுபோன்ற விபத்துக்களால் தினசரி சுமார் பத்து பேர் உயிர் இழப்பதாகவும்
பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.