யாழில் ஒரேநாளில் வடமாகாணசபை உறுப்பினர் செய்த நற்செயல் VIDEO

ஆசிரியர் - Admin
யாழில் ஒரேநாளில் வடமாகாணசபை உறுப்பினர் செய்த நற்செயல் VIDEO

யாழ். வணிகர் கழகத்தின் முன்னாள் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினருமான இ. ஜெயசேகரன் தனது பதவிக்காக வழங்கப்படும் சம்பள நிதியில் பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கி வருகிறார். இதற்கமைவாக இன்று புதன்கிழமை (21) பிற்பகல்- 04 மணி முதல் யாழ். வணிகர் கழகத்தில் வணிகர் கழகத் தலைவர் இ. ஜனக்குமார் தலைமையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 22 பேரினது வாழ்வாதார மேம்பாட்டிற்கான தொழில் உபகரணங்களும், நிதியுதவிகளும் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாட் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, வடமாகாண சபை உறுப்பினர் இ. ஜெயசேகரன், வணிகர் கழகத் தலைவர் இ. ஜனக்குமார் மற்றும் வணிகர் கழக நிர்வாகத்தவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார உதவித் திட்டங்களைச் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தனர்.

ஜெயசேகரன் வடமாகாண சபையில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற காலப் பகுதியிலிருந்து மாதாந்தம் குறித்த உதவிகளை வழங்கி வந்துள்ள நிலையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாழ்வாதார உதவித் திட்டங்கள் இன்றைய தினம் மீளவும் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக மூன்று இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட உதவித் திட்டங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் கழகமொன்றைச் சேர்ந்த 80 இளைஞர்களும், அங்கு பணிபுரிகின்ற 15 உத்தியோகத்தர்களும் தென்னிலங்கையில் இரண்டு வாரங்கள் இடம்பெறவுள்ள விசேட முகாமொன்றில் கலந்து கொள்வதற்குச் செல்லவுள்ளனர். அவர்கள் குறித்த முகாமில் கலந்து கொண்டு நன்மை பெறும் பொருட்டு யாழ்.வணிகர்கழகம் பெறுமதியான உணவுப் பொருட்களையும் இதன் போது வழங்கி வைத்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பலருக்கும் முன்னுதாரணமான வகையில் செயற்பட்டு வரும் வடமாகாண சபை உறுப்பினர் இ. ஜெயசேகரன் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது எமது சமூகத்தில் கணவரை இழந்த பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் பலரிருக்கிறார்கள். அது மாத்திரமன்றி போரால் பலபாதிப்புக்களைச் சுமந்தவர்களும் காணப்படுகிறார்கள்.அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டிய தேவை எமக்குண்டு. அந்த வகையில் தான் மாதாந்தம் எனது சம்பளத்திலிருந்து பெறப்படும் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றேன்.

இந்தச் செயற்பாட்டை நான் தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு