யாழ்ப்பாணத்தில் கட்டாக்காலி நாய்களுக்கு வாழ்வு கொடுக்க ஆயத்தமாகும் சிவபூமி

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் கட்டாக்காலி நாய்களுக்கு வாழ்வு கொடுக்க ஆயத்தமாகும் சிவபூமி

யாழ்ப்பாணத்தில் கட்டாக்காலிகளாக விடப்பட்டுள்ள நாய்க்குட்டிகள், நாய்கள் அனைத்தையும் எமது சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் பொறுப்பேற்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். பளை இயக்கச்சியில் பத்து ஏக்கர் நிலப்பரப்பை சிவபூமி நாய்கள் காப்பகத்திற்காக ஒதுக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா நேற்றுச் சனிக்கிழமை(17) முற்பகல் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வைரவரை நாய் வடிவத்தில் கண்டு வழிபடும் சமயமாக சைவசமயமுள்ளது. ஆனாலும், எந்த நாட்டிலும் காண முடியாத துன்பமாக யாழ்.குடாநாட்டில் பல நூற்றுக்கணக்கான நாய்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளன. இவ்வாறான குட்டி நாய்க்குட்டிகள் பல வீதிகளைக் கடக்கும் போது வாகனங்களுடன் மோதுண்டு இறப்பதுடன் காயங்களுக்கும் உள்ளாகின்றன. 

இவ்வாறு இறந்துகிடக்கும் நாய்களைக் கடந்து செல்லும் எம்மவர்கள் துப்பிவிட்டுச் செல்வது துன்பத்திலும் துன்பம். யோகர் சுவாமிகள் போன்ற மகான்கள் நாய்களை பாராமரிக்காமல் அநாதரவாக விடுவது தவறு எனத் தெரிவித்துள்ளார்கள்.

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான வளாகத்தில் தற்போது இவ்வாறான 34 கட்டாக்காலி நாய்க்குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று சிவபூமி முதியோரில்லத்தில் 15 நாய்க்குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாய்க்குட்டிகள் அனைத்தும் அநாதரவான முறையில் கொண்டு வந்து விடப்பட்டவையாகும்.

நீங்கள் சுழிபுரத்தில் முதியோர்களையும், கோண்டாவிலில் மனவிருத்தி குறைந்த மாணவர்களையும், தெல்லிப்பழையில் மகளிர்களையும் வைத்துப் பராமரித்து வரும் நிலையில் நாய்கள் பராமரிப்பு அவசியம் தேவைதானா? எனப் பலரும் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள். ஆனால், நாய்களுக்கான காப்பகத்தை உருவாக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு