வடமாகாணசபையின் தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் கையளிப்பு!

ஆசிரியர் - Admin
வடமாகாணசபையின் தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் கையளிப்பு!

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு நேரில் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்திற்குள் நம்பிக்கை தரும் வகையில் அரசாங்கம் ஒன்றையுமே செய்திருக்கவில்லை. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறு கோரி வடமாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மின்னஞ்சல் மற்றும் தபால் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் ஒரு பிரதியை கடந்த 9ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையளருக்கு நேரில் வழங்கியுள்ளேன். வடமாகாண சபையின் தீர்மானத்தை வழங்கும்போது ஆணையாளருடன் ஒரு நிமிடம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

அப்போது இலங்கை அரசும் இணங்கி நிறைவேற்றிய 30:01 தீர்மானத்தில் இலங்கை அரசு இணங்கியிருந்த 36 நிபந்தனைகளில் ஒன்றான மீள நிகழாமை என்ற நிபந்தனை அப்பட்டமாக மீறப்படுகின்றது எனவும் அதற்கு கண்டியிலும், அம்பாறையிலும் முஸ்லிம் மக்கள் மீது இடம்பெற்ற வன் செயல்களை சுட்டிக்காட்டியிருந்தேன். அதனடிப்படையில் சிறுபான்மை இனங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொ டர்ச்சியான வன்செயல்களை கட்டவிழ்த்து வருகின்றது என சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

அதேபோல் 9ம் திகதி பொதுச்சபை கூட்டத்தில் பேசுவதற்கு ஒரு நிமிடமும் 30 விநாடிகளும் வழங்கப்பட்டது. அப்போது இலங்கை அரசாங்கம், தாமும் இணங்கி நிறைவேற்றிய 30:01 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என சொல்கிறது.குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் அப்பட்டமாக அதனை கூறிவருகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

எனவே இலங்கை அரசை ஒரு சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறும், ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட அழுத்தம் கொடுக்கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளேன். மேலும் வடமாகாணசபையின் தீர்மானம் வடமாகாணத்தில் வாழும் 11 லட்சம் மக்களுடைய நிலைப்பாடாக உள்ளது. அதனடிப்படையில் 26ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்பிக்கவுள்ள அறிக்கையில் வடமாகாணசபையின் தீர்மானம் பெரிதும் தாக்கம் செலுத்தும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு