காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் சர்வதேச தலையீட்டை கோருமாறு வலியுறுத்தல்

ஆசிரியர் - Admin
காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் சர்வதேச தலையீட்டை கோருமாறு வலியுறுத்தல்

இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் எந்தவிதமான தீர்வு கிடைக்கப்போவதில்லை.

ஆகவே, இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டை கோருமாறு வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரனை சந்தித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் நடப்பு கூட்டத்தொடரில் கௌரவ அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் பங்கேற்கவிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (09.03.2018) அன்று கிளிநொச்சி மாவட்த்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தவர்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்கள்.

அமைச்சர் அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடித்து ஏமாற்றும் வகையிலேயே உள்ளது. போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் தொடர்புடைய இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இனியும் பொறுமையாக இருக்க முடியாது. இவ்விடயத்தில் சர்வதேசத்தின் நேரடித்தலையீடு ஒன்றே உரிய நீதியைப் பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம். ஆகவே, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் பிரதிநிதியாக ஜெனீவாவில் இவ்விடயத்தை கோருமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொள்வதற்காக கௌரவ அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் நேற்று (ஞாயிறு) ஜெனீவா புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு