ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு எதிரான வழக்கு ஆடி மாதம் 14ம் திகதி
முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரை தாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு எதிரான வழக்கு ஆடி மாதம் 14ம் திகதி
முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரை சிறைப்பிடித்து தாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்டு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கோட்டாபய கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் செய்த முறைப்பாட்டின் வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் இன்று(16) இடம்பெறது
இன்று முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் கெங்காதரன் அவர்கள் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது கடற்படை சிப்பாய் நீதிமன்றுக்கு வருகைதரவில்லை இந்நிலையில் குறித்த விடயம் போலியாக போடப்பட்ட முறைப்பாடு எனவும் வழக்கிலிருந்து எம்மை விடுவிக்குமாறும் ஊடகவியலாளர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் கோரினர் இதன்போது வழக்கினை எதிர்வரும் ஆடி மாதம் 14 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வருடம் (2019) ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றுதிரண்டு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை பேரணியாக சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.
இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பீடத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் அடையாம் தெரியாத நபர் ஒருவர் தனது கைபேசியில் நிழற்படம் எடுத்ததை அவதானித்த ஆர்ப்பாட்டகாரர்கள் அவரை அடையாளப்படுத்த முற்பட்டுள்ளனர்.
இதன்போது முல்லைத்தீவு ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அதற்கு பதிலளிப்பதற்கு மறுத்த அவர் அந்த இடத்தை விட்டு தப்பியோடுவதற்கும் முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டகாரர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தாம் கடற்படை சிப்பாய் என தெரிவித்த நிலையில் இது குறித்து முல்லைத்தீவு பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
எனினும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வர தாமதமான நிலையில் கடற்படை சிப்பாய் என அடையாளப்படுத்திய நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவரை அங்கே நின்ற பொலிசாரிடம் விட்டு விட்டு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் உள்ளிட்ட தரப்பினர் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் முகாமுக்கு சென்ற சிப்பாய் ஊடகவியலாளரை பழிவாங்கும் நோக்கோடு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சென்று தன்னை சிறைப்பிடித்து தாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்டு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முறைப்பாடு செய்திருந்தார் இந்நிலையில் முறைப்பாட்டினை விசாரணை செய்யவென அழைப்பப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பொலிஸாரால் கடந்த வருடம் (2019)ஏப்ரல் மாதம் 20 ம் திகதி கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் ரி. பரஞ்சோதி, வழக்கை 2019 ஏப்ரல் 30ம் திகதிக்கு ஒத்திவைத்தார்
இந்த வழக்கு தொடர்ச்சியாக பல தடவைகள் முல்லைத்தீவு நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான க.கணேஸ்வரன் மற்றும் சுபா விதுரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.இவ்வாறு தவணையிடப்பட்டு வந்த இந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.