கொழும்பிலிருந்து களவாக யாழ்ப்பாணம் வந்துள்ள 7 போினால் ஆபத்தில்லை என பொய் சொல்ல முடியாது..! 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..
அதியுச்ச அபாய வலயமான கொழும்பிலிருந்து யாழ்.மாவட்டத்திற்கு தப்பிவந்த 7 போின் குடும்பங்களும் 3 வாரங்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உச்ச பாதுகாப்புக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கண்டவாறு வடமாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நேற்றைய தினம் 7 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து எவ்வித அனுமதியும் பெறாது,
அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் பாவூர்திகள் மூலம் இரகசியமாக வருகை தந்துள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் முதலில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு,
அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஏனைய ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களும் இவர்களை ஏற்றிவந்த பாரவூர்தி சாரதி மற்றும் உதவியாளரும் தனிமைபடுத்தல் சட்டத்தை மீறியதால்
நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒன்பது பேரையும் தனிமைப்படுத்தும் மையமொன்றில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் காலத்தில்
இவர்களுக்கான கோரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இவர்களினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளதால்
இவர்கள் தங்கியுள்ள வீட்டில் உள்ளவர்களையும் அவர்கள் தங்கியுள்ள வீட்டிலேயே தனிமைப்படுத்தி அடுத்த மூன்று வார காலத்திற்கு பாதுகாப்பு படையினர், பொலிஸ் உத்தியோகத்தாகள், சுகாதார மருத்துவ அதிகாரி,
மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கண்காணிக்கப்படுவார்கள்.இவர்கள் அனைவருக்கும் இக்காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இச்சம்பவத்தால் இவ்வளவு காலமும் வடமாகாணத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரும் எடுத்த முயற்சிகள் யாவும் கேள்விக்குறியாகலாம். எனவே இவ்வாறான சூழ்நிலையில்
வேறு மாகாணங்களில் இருந்து குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து அனுமதியின்றி உங்கள் பிரதேசத்திற்கு யாராவது வருகை தந்தால் உடனடியாக அவர்கள் பற்றிய விவரங்களை உங்கள்
பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி , சுகாதார உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர் ஆகியோரில் யாராவதொருவருக்கு தெரியப்படுத்தவும். அவர்களை தொடர்புகொள்வதில் சிரமம் இருப்பின் எமது
மாகாண சுகாதாரசேவைகள் பணிமனை அவசர அழைப்பெண்ணான 021 222 6666 க்கு தொடர்பு கொண்டு அவர்களைப்பற்றிய தகவல்களை வழங்கவும்.