SuperTopAds

3 பாரவூர்தி உரிமையாளர்களால் யாழ்.மாவட்டத்திற்கு பேராபத்து..! பொறுப்பற்ற இந்த செயலுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என யாழ்.மாவட்ட செயலர் சீற்றம்..

ஆசிரியர் - Editor I
3 பாரவூர்தி உரிமையாளர்களால் யாழ்.மாவட்டத்திற்கு பேராபத்து..! பொறுப்பற்ற இந்த செயலுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என யாழ்.மாவட்ட செயலர் சீற்றம்..

அதியுச்ச அபாய வலயமான கொழும்பிலிருந்து 7 பேரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திவந்தது அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவருவதற்காக அனுமதிக்கப்பட்ட 3 பாரவூர்திகள் என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இந்நிலையில் குறித்த பாரவூர்திகளில் ஏற்றிவரப்பட்ட பொருட்களை பரிசோதிப்பது அவசியமாகவுள்ளது. எனவும் மாவட்ட செயலர் கூறியிருக்கின்றார். இன்று இரவு ஊடகம் ஒன்றுக்கு கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய பொருள்கள் தட்டுபாடின்றி கிடைக்கவேண்டும் என்ற காரணத்துக்கு பாரவூர்தி உரிமையாளர்கள் வர்த்தகர்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு பல தளர்வுகளும் வழங்கப்பட்டன. 

எனினும் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அனுமதியை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் செயற்படக்கூடாது. சாரதிகள் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும். சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி அபாய வலயமான கொழும்பில் தங்கியிருந்தவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவதற்கு 3 பாரவூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அறியக்கிடைக்கிறது. 

அவற்றில் ஏற்றிவரப்பட்ட பொருள்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவது அவசியமாகிறது. எனவே பாரவூர்திகள் தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மேலும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன்அவர்களுக்கு வழங்கப்படும் ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை இறுக்கமாக்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என்றார்.