கனடாவில் தொடர் துப்பாக்கிச் சூடு - 17 பேர் பலி!
கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் போலீஸ்காரர் போல உடையணிந்த ஒரு நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், ஒரு பெண் போலீஸ் அதிகாரி உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து கனடா காவல்துறை தெரிவித்ததாவது:
காரில் தப்பிக்க முயன்ற குற்றவாளியை துரத்திச் சென்று வேட்டையாடியது காவல்துறை. இந்த துரத்தலில், தாக்குதல் நடத்தியவர் இறந்தார். அவர் பெயர் கேப்ரியல் (51) என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு காவல்துறையின் வாகனத்தில் வந்த அந்த துப்பாக்கி ஏந்திய நபர் நோவா ஸ்கோடியா மாகாணம் முழுவதும் பல இடங்களில் மக்களை சுட்டுக் கொன்றுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 23 ஆண்டுகளாக ராயல் கனடா மவுண்டட் காவல்துறையில் பணியாற்றிய கான்ஸ்டபிள் ஹெய்டி ஸ்டீவன்சன் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். உடன் பணியாற்றியவர்களைப் பாதுகாக்கும் போது அவர் உயிரிழந்தார் என்று நோவா ஸ்கோடியாவின் உதவி ஆணையர் லீ பெர்கர்மேன் கூறினார்.
இரண்டு குழந்தைகள் தங்கள் தாயையும், ஒரு பெண் தன் கணவனையும், ஒரு பெற்றோர் தங்கள் மகளையும் இந்தச்சூட்டில் இழந்தனர், என்றார்.