சட்டவிளக்கம் தேவையில்லை- தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே!
தேர்தலை நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய வேண்டிய அவசியமில்லை எனவும் நாடாளுமன்ற சட்டத்திற்கு அமைய தேர்தலை நடத்த வேறு ஒரு திகதியை நிர்ணயிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மீண்டும் தேர்தலை நடத்தும் தினத்தை தீர்மானிப்பது மாத்திரமல்ல, தேர்தல் நடைபெற்று மூன்று மாதங்களுக்கு அரச நிதி செலவுகள் தொடர்பான அதிகாரமும் ஜனாதிபதிக்கே உள்ளது.
தேர்தலை நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்டறிய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கடிதம் தொடர்பில் ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடும் போதே கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 2 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த ஜனாதிபதி மார்ச் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டு, ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அடுத்து தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.
தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் காலத்திற்கு ஏற்றது. அதேபோல் உயர் நீதிமன்றத்திற்கு கருத்தை அறியுமாறு ஜனாதிபதியிடம் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.
உயர் நீதிமன்றத்திடம் கருத்தை கேட்குமளவுக்கு சட்ட சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 70 ஷரத்திற்கு அமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு கூறுமாயின் அப்போது அரசியலமைப்புச்சட்டம் தொடர்பான பிரச்சினை ஏற்படும். செய்ய முடியாததை செய்யுமாறு உத்தரவிட முடியாது. செயற்பாட்டு ரீதியாக செய்ய முடியாது என்றால், அங்கு சட்டத்தை மீறியதாக கருதப்பட மாட்டாது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.