கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு மட்டும் அனுமதி..! சுற்றறிக்கை வெளியானது..
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவரின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதித்துள்ள அரசாங்கம், வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடம் ஒன்றில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பார்வையிட அனுமதி வழங்கி சுற்றறிக்கை வெளியிட்டிருக்கின்றது.
60 வயதான மரவில பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளி தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்று இரவு உயிரிழந்தார். இவரே கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த 1வது நபர் ஆவார் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கின்றது.
இந்நிலையில் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் குறித்த நபருடைய சடலத்தை உறவினர்களிடம் வழங்க முடியாது என கூறப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இறப்பு விசாரணை அவசியமில்லை ,மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும்
வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பூதவுடலை காண்பிக்க முடியும், சடலத்தை உடகூற்று பரிசோதை, சடலம் பழுதடையாது மருந்தேற்றல் என்பவை செய்யப்படலாகாது என்பதுடன், சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது, சடலம் பொதியிடப்பட்டு முத்திரையிடப்படவேண்டும்(சீல்),
முத்திரையிடப்பட்ட சடலம் எக்காரணம் கொண்டு மீளத் திறக்கப்படலாகாது, முத்திரையிடப்பட்ட சடலம் 24 மணிநேரத்தில் எரிக்கப்படவேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.