48 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா விசா!
இலங்கைக்கு 48 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் அறவிடப்படாமல் விசா அனுமதி வழங்கும் முறை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் இந்தச் சலுகையை நீடிப்பதற்கு அமைச்சரவையில் நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்காக இலவச விசா வழங்கப்பட்டது.
இந்த விசா நடைமுறையானது கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவிருந்தது. எனினும் அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.