ரயில் தண்டவாளத்தில் கிளிப்புகளை திருடி விற்றவருக்கு விளக்கமறியல்..
யாழ்.மல்லாகம் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் கிளிப்புக்களை திருடி பாரிய ரயில் விபத்து ஒன்றை உருவாக்க முயற்சித்தவரை 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவரால் திருடப்பட்ட இரும்புக் கிளிப்புக்களை வாங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக போதிய சான்றாதாரங்கள் இல்லை என்ற நிலையில் அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
மல்லாகத்திற்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள வளைவொன்றில் தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு கிளிப்புகள் கடந்த
வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டிருந்தன. சுமார் இருபதற்கும் மேற்பட்ட சிலிப்பர் கட்டைகளின் கிளிப்புகள் அகற்றப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து
விரைந்து செயற்பட்ட பொலிஸார் அது தொடர்பில் ரயில்வே திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தினர். அதனை அடுத்து விரைந்து செயற்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் , கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு கிளிப்புகள்
பொருத்தப்பட்டதனால் ரயில் பாதை சீர் செய்யப்பட்டது. அதனால் நடைபெறவிருந்த தொடருந்து விபத்து தடுக்கப்பட்டது.தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தபட்டிருந்த கிளிப்புகள் அகற்றப்பட்டமையால்
தொடருந்து வரும் போது அவ்விடத்தில் தடம் புரளும் வாய்ப்புக்கள் அதிகம். அதேவேளை அப்பகுதி குடிமனைகள் அதிகமாக உள்ள பகுதியும் ஆகும். அவ்விடத்தில் தொடருந்து தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு இருந்தால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கலாம்
என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம்
பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.சம்பவ இடத்தில் கிடைத்த தடையங்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு அவற்றைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுபவரை சுன்னாகம் சோடாக் கம்பனி என்ற பகுதியுள்ள
அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர்.சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட ரயில்வே தண்டவாளக் கிளிப்புக்களை வாங்கினார் என்ற குற்றச்சாட்டில் பழைய இரும்பு வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
எனினும் திருடப்பட்ட கிளிப்புக்கள் மீட்கப்படவில்லை.இருவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டனர். முதலாவது சந்தேகநபரான தண்டவாளக் கிளிப்புக்களைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை
வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான், இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லாததால் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.