SuperTopAds

தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன!

ஆசிரியர் - Admin
தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன!

தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் தற்போது ஆக்கிரமிக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் தெரிவித்துள்ளார்.

 கடந்த முதலாம் திகதி முல்லைத்தீவின், கொக்குத்தொடுவாய் பகுதியில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையாலும், வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் ஆக்கிரமிக்கப்படும் இடங்களை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிரன் நேரில் சென்று பார்வையிட்டிருந்ததுடன், அந்த அபகரிப்பு நிலைமைகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில்,இன்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரையாற்றும்போது, குறித்த அபகரிப்பு நிலைமைகள் தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் திருமதி உமாமகள் மணிவண்ணன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.

இது குறித்து அங்கு அவர் மேலும் கருத்துரையாற்றுகையில்,

கடந்த 01.08.2019 கொக்குத்தொடுவயாய் பகுதி கமக்கார அமைப்பின் அழைப்பினை ஏற்று, நான் அங்கு சென்று, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையாலும், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை அப்பகுதி மக்களுடன் இணைந்து பார்வையிட்டேன்.

அங்கு இரகசியமான முறையிலும் மிகவும் பாரிய அளவிலான சிங்களக் குடியேற்றங்களுக்கான திட்டமிடல்கள் இடம்பெறுவதைக் காணக்கூடியவாறுள்ளது.

சின்னக்குளம், மற்றும் ஊரடிக்குளம் பகுதிகளில் இவ்வாறான சிங்களக் குடியேற்ற முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

எங்களுடைய எல்லைப் பரப்புக்குள், எங்களுடைய பூர்வீக நிலங்களுக்குள், எங்களுடையவர்கள் ஆண்ட இடங்களுக்குள்ளேயே இவ்வாறு சிங்களக் குடியேற்றங்களுக்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக ஊரடிக்குளம் தற்போது சேதமடைந்து காணப்படும்போதுங்கூட, அந்தப்பகுதி தமிழ் விவசாயிகள் அதை தங்களால் இயன்றவரையில் சீரமைத்து, சுமார் 30ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்பாய்ச்சக்கூடிய அளவிற்கு அந்த குளத்தில் நீரைத் தேக்கி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள்தான், ஆயிரம் ஏக்கர் வரையில் பறிபோகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.

இதேவேளை அப் பகுதிகளில் பாரிய அளவில் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நகரிலேயே இல்லாத அளவிற்கு மின்கமபங்கள் அப்பகுதிகளில் மிகப் பாரிய அளவில் நாட்டப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகள்ளது.

காடுகள் என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும், முன்னைய எங்கள் மக்களுடைய நிலப்பகுதிகளிலேயே இவ்வாறான அபகரிப்பு முயற்சிகள் இடம்பெறுகின்றன.

கரைதுறைப்ற்றுப் பிரதேசசெயலாளர் இவற்றை முக்கியமாக பார்க்கவேண்டும் என்தனை நினைவூட்ட விரும்புகின்றேன்.எங்களுடைய நிலப்பரப்புகளை இவ்வாறு பறிக்க எடுக்கப்பபடும் முயற்சிகள் நிச்சயமாக பிரதேசச் செயலாளருக்குத் தெரியவேண்டும்.

அங்கு பாரிய ஒரு வீதியோடு சேர்த்து, மின்சாரம் வழங்குவதற்காக மின்சாரக் கம்பங்கள் நாட்டப்பட்டு இப்படியாக எமது நிலங்களை ஆக்கிரமிப்பதன் நோக்கம், திட்டமிட்ட மேலதிகமான சிங்களக்குடியேற்றங்களை அமைப்பதற்கே என்தை ஆணித்தரமாக கூறுகின்றேன்.

இதை பிரதேசச் செயலாளரதும், பாரளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவினதும் கவனத்திற்கும் கொண்டுவருகின்றேன்.நிச்சயமாக இதை மாவட்டசெயலாளரது வனத்திற்கும் கொண்டுசெல்லுங்கள்.

எங்களுடைய இந்த இடங்களில், எமது மக்கள் தற்போதும் விவசாயம் செய்துகொண்டிருக்கின்ற இடங்கள்கூட இவ்வாறான அபகரிப்பக்குள் உள்ளடங்குகின்றன.

இதில் சில இடங்களில் குடியேற்றிவிட்டனர். குடில்கள் அமைத்து அங்கு இருக்கின்றனர். இவ்விடயங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

நான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,பிரதேசசெயலர் மற்றும் மாவட்டசெயலருக்கும் இந்த விடயங்களை தெரிவிப்பதாக அந்த மக்களிடம் தெரிவித்துவிட்டு வந்திருந்தேன். அந்த வகையில் இதை தங்களிடம் தெரிவிக்கின்றேன்.

அந்தப் பகுதிகளில் தமிழ் மக்கள் வழிபட்ட காளி கோவில் சிதைவடைந்திருக்கின்றது. அதேபோல் அவர்கள் பயன்டுத்திய கிணறுகளும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறான தமிழர்களுடைய பூர்வீகமான, தொன்மையான இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு பொருத்தமான இடத்திலிருக்கும் பிரதேசச்செயலாளர், மாவட்டசெயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக கருத்திலெடுத்துச் செயற்படவேண்டும்.

எங்களுடைய கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் பகுதி மக்களுடைய வாழ்வாதார, பூர்வீக இடங்களை அபகரிக்க விடாது காப்பாற்றவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.