SuperTopAds

இந்திய ராணுவத்தை மோடி அவமானப்படுத்தியதாக ராகுல் காந்தி சாடல்!

ஆசிரியர் - Admin
இந்திய ராணுவத்தை மோடி அவமானப்படுத்தியதாக ராகுல் காந்தி சாடல்!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல்களை விமர்சித்து இருப்பதன் மூலம், பிரதமர் நரேந்திரமோடி ராணுவத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் எல்லை தாண்டிச் சென்று துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருந்தார். 

இதை விமர்சித்த பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரசின் தலைவர்கள் வீடியோ கேம் விளையாடுவார்கள் என்றும், அதில் சில விளையாட்டுகளை துல்லியத் தாக்குதல் நடத்துவது போல் ஒப்பிட்டு ரசித்து இருப்பார்கள் என்றும் கிண்டலடித்தார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த ராகுல் காந்தி, இந்திய ராணுவம் ஒன்றும் பிரதமர் மோடியின் தனிப்பட்ட உடைமை அல்ல எனக் கூறினார். துல்லியத் தாக்குதல்களை வீடியோ கேம்கள் என்று மோடி விமர்சிப்பதன் மூலம் இந்திய ராணுவத்தை மோடி அவமதித்து விட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார்.

மேலும் ரபேல் மறுசீராய்வு வழக்கு விசாரணையின் போது, மோடியை திருடர் என்று உச்சநீதிமன்றமே கூறி விட்டதாகப் பேசியது தொடர்பாக நீதிமன்றத்திடம் தான் வருத்தம் தெரிவித்ததாகவும், மோடியிடமோ அல்லது பாஜகவிடமோ அல்ல என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.