சிவபெருமானையும், புத்த பெருமானையும் சாத்தான்கள் என சொன்னால் மட்டுமே தடை..! இப்போது தடையில்லையாம்.
யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு தாம் தடை விதிக்கவில்லை எனவும் குறித்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு பாதகமாக முன்னெடுக்கப்பட்டாலே தடை விதிக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அது குறித்து பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கையில் ,
மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.
அந்நிலையில் குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வாகும். இதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது.
அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர் அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.
அது தொடர்பில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியுடன் பேசியுள்ளார். அதன் போது பொறுப்பதிகாரி குறித்த நிகழ்வுக்கு தாம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , குறித்த மத நிகழ்வில் ஏனைய மதங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது , ஏனைய மதங்களை இழிவு படுத்துதல் போன்ற மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் ,
அவ்வாறு மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் குறித்த மத நிகழ்வு நடத்தப்பட்டால் நீதிமன்றை நாடி உடனடியாக அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளார். என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.